Published : 25 Jul 2019 04:41 PM
Last Updated : 25 Jul 2019 04:41 PM

திருப்புல்லாணி அரசு பள்ளியில் மாணவர்களே நடத்திய 'கல்வெட்டுகள் அறிவோம்' பயிலரங்கம்

ராமேஸ்வரம்

திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் 'கல்வெட்டுகள் அறிவோம்' பயிலரங்கத்தை மாணவர்கள் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 'கல்வெட்டுகள் அறிவோம்' பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரான  வே.ராஜகுரு கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கத்திற்குத் தலைமை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் பயிலரங்கத்தை தொடங்கி வைத்துப் பேசும்போது, "கல்வெட்டுகள் வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன. அவை பற்றிய அறிவை மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் பகுதிகளில் புதிய கல்வெட்டுகள் இருந்தால் அதைத் தெரிவிப்பார்கள். அதன் மூலம் அவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாக்க முடியும்" என்றார்.

கல்வெட்டுகளில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், எண்கள் ஆகியவை பல்வேறு நூற்றாண்டுகளில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து தற்போதைய வரி வடிவம் பெற்றன என எட்டாம் வகுப்பு மாணவிகள் வி.டோனிகா, க.அபிராமி, மு.பிரவீணா ஆகியோர் பிற மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.  

7 ஆம் வகுப்பு மாணவிகள் ச.பிரியதர்ஷினி, ஜீ.ஹரிதாஜீவா ஆகியோர் கல்வெட்டுகளின் அமைப்பு, அவை பற்றிய சில சுவையான தகவல்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் த.முகம்மது பாசில் கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள் பற்றியும் பேசினர்.

7 ஆம் வகுப்பு மாணவர் செ.கார்த்திகேயன் நன்றி கூறினார். மாணவிகள் ஜெ.சுஜிதாஸ்ரீ, சே.ஆனந்தி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி கலந்துகொண்டார். 

இந்த கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகளை மாணவர்கள் பார்த்து, படித்து அறிந்து கொண்டனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x