Published : 25 Jul 2019 01:15 PM
Last Updated : 25 Jul 2019 01:15 PM

கண்ணீரை நிறுத்த முடியவில்லை: எம்.பி.யாகப் பதவியேற்ற வைகோவுக்கு வைரமுத்து வாழ்த்து

வைகோ எம்.பி.யாகப் பதவியேற்றபோது ஆனந்தத்தில் கண்ணீரை நிறுத்த முடியவில்லை என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து கடந்த 2013-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), கனிமொழி (திமுக), மைத்ரேயன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக) ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. இதில் கனிமொழி மக்களவை உறுப்பினராகத் தேர்வானதால் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த இடங்களுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்றுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, எம்.பி. வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

''வாழ்த்துகள் வைகோ...

சிறுத்தைபோல் நடந்து சென்றாய்
செம்மொழி உறுதி பூண்டாய்
நிறுத்தவே முடியவில்லை
நீள்விழி வடித்த கண்ணீர்

போர்த்திறம் பழக்கு – விட்டுப்
போகட்டும் வழக்கு – உன்
வார்த்தைகள் முழக்கு – நீ
வடக்கிலே கிழக்கு''

என்று தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் ட்விட்டர் பதிவுக்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x