Published : 21 Jul 2019 10:23 AM
Last Updated : 21 Jul 2019 10:23 AM

முன்னுரிமை தகுதியை இழக்கும் 90 சதவீத குடும்ப அட்டைகள்?- ஆய்வுக்குப் பின் அதிகாரிகள் பரிந்துரை

எஸ். ஸ்ரீனிவாசகன்

மதுரை

மதுரையில் 90 சதவீத குடும்ப அட்டைகளின் முன்னுரிமை சலுகையை ரத்து செய்யலாம் என ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் தகுதியற்ற குடும்ப அட்டைகளுக்கான மானியத்தை ரத்து செய்ய வீடு,வீடாக ஆய்வுப் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. சொந்த வீடு, அரசுப் பணி, நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட 10 தகுதிகள் பெற்றிருந்தால் அட்டைதாரர்களின் முன்னுரிமையை ரத்து செய்யலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் அரிசி, மண் ணெண்ணெய் உள்ளிட்ட மானி யத்தில் வழங்கப்படும் பல பொருட்களைப் பெற முடியாது.

முதற்கட்டமாக, பரீட்சார்த்த முறையில், ஒரு மண்டலத்துக்கு 100 குடும்ப அட்டைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 11 மண்டலங்களின் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வீடு,வீடாக 4 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் 90 சதவீதம் குடும்ப அட்டைகளின் முன்னுரி மையை ரத்துசெய்து பரிந்துரை அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து வட்டாட்சியர் ஒருவர் கூறியதாவது:

வீட்டின் நிலையைப் பார்த்தாலே வசதியை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் குடும்பத் தலைவர் பார்க்கும் வேலை மூலம், குடும்பத்தின் வருமானத்தை அறியலாம். இதை வைத்தே, ஒரு குடும்பம் வறுமையில் உள்ளதா என்பதைக் கணிக்க முடியும். ஒவ்வொரு குடும்பத்தின் வருமான நிலை, வேலை உள்ளிட்ட தகவல்களைப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிந்து கொண்டோம். அதை வைத்து, உரிய குடும்பங்களில் விசாரணை நடத்தினோம். வீட்டை நேரில் மதிப்பிட்டோம். ஆய்வு செய்த 100 குடும்ப அட்டைகளில் 90-க்கும் மேலானவை முன்னுரிமை பெற்று வரும் தகுதியை இழப்பதாகவே உள்ளன.

பல குடும்பங்கள் அரசு விதித்துள்ள 10 வசதிகளையும் பெற்றுள்ளன. இதுகுறித்து முழு விவரங்களுடன் மானியப் பொருட்களைப் பெறும் முன்னு ரிமையை ரத்து செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளோம். கூலி வேலை, சிறிய தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் என 10 சதவீதத்துக்கும் உட்பட்ட குடும்பங்களே தப்பி உள்ளன. கிராமப் பகுதியில் இந்த நிலை மாறலாம். முதற்கட்டமாக, மதுரை மாவட்டத்தில் 1,100 அட்டைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் 900-க்கும் அதிகமானவை முன்னுரிமை பெறும் தகுதியை இழக்கின்றன. எங்கள் பரிந்துரையின்பேரில் விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைகள் மீதும் விரைவில் ஆய்வு நடக்கும். ஆய்வு முழுமையடையும்போது நியாய விலைக்கடைகளில் தற்போது மானியத்தில் பொருட்கள் பெறும் அட்டைகளின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறையும்.

அப்போது அரசுக்கு மானியச் செலவு கணிசமாக மிச்சமாகும். வட்டாட்சியர் அளவில் நேரடியாக ஆய்வு செய்வதால் 100 சதவீதம் சரியான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகள் நடவடிக்கைக்கு உள்ளாகும்போது சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x