Published : 18 Jul 2019 10:40 AM
Last Updated : 18 Jul 2019 10:40 AM

மூன்றாண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி சொந்த செலவில் செங்கழுநீர் ஏரியை தூர் வாரும் பணி; கள்ளபெரம்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர் 

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளபெரம் பூர் கிராமத்தில் உள்ள பழமையான செங்கழுநீர் ஏரியை சொந்த செலவில் தூர் வாரும் பணியை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் நேற்று தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பொழியும் மழைநீர் செம்மண் நிலத்தில் பாய்ந்து ஓடிவந்து சேருமிடமான செங்கழுநீர் ஏரி 642 ஏக்கர் பரப்பள விலானது. 8 மதகுகள், 2 வெள்ள நீர் வடிகால்களைக் கொண்டுள்ள இந்த ஏரியின் உதவியால் 2,662 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கள்ளபெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், ராயந்தூர், வடகால், சித்தரக்குடி ஆகிய கிராமங்களுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்கிறது. மேலும், கல்லணையில் பிரிந்து வரும் வெண்ணாறு, கச்சமங்கலம் அணையில் இருந்து பிரிந்துவரும் தண்ணீர் ஆனந்தக்காவிரி வாய்க்கால் வழியாக வழிந்தோடி வரும் தண்ணீர் இதன் மற்றொரு முக்கியமான நீராதாரம்.

கள்ளபெரம்பூர் ஏரியில் முறை யாக தண்ணீரை தேக்கினால், சுற்றுவட்டார பகுதியில் 2 போகம் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இந்த ஏரியைத் தூர் வார ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் நடைபெறாமல் முடங்கியது. இதையடுத்து, ஏரியை தூர் வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த 2016-ல் செங்கழுநீர் ஏரி சீரமைப்புக் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கிய இந்த ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் கிராம மக்கள், தாங்களாகவே ரூ.8 லட்சம் நிதி திரட்டி தூர் வாரும் பணியைத் தொடங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.

இந்த தூர் வாரும் பணிக்கு ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதால், ஏரியை தூர் வார அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டங்களில் மனு அளிப்பது என கடந்த மூன்றாண்டுகளாக கிராம மக்கள், இளைஞர்கள் போராடிய நிலையில், கடந்த வாரம் அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இதையடுத்து, நேற்று சிறப்பு பூஜை செய்து தூர் வாரும் பணி தொடங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து செங்கழுநீர் ஏரி சீரமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததை அடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு கிராம மக்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஏரியை தூர் வார நிதி திரட்டியபின், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டோம். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குடிமராமத்து பணியில் ஏரியை தூர் வாரித் தருகிறோம் என்றனர். ஆனால், கூறியபடி பணியைத் தொடங்கவும் இல்லை, எங்களையும் தொடங்க விடவில்லை. இதைத்தொடர்ந்து, மூன்றாண்டு களாக முயற்சி செய்து, இப்போது தான் அனுமதி கிடைத்து பணிகளை தொடங்கியுள்ளோம். நாங்கள் குடிமராமத்து பணிக்கு மக்கள் பங்களிப்பாக செலுத்திய ரூ.8 லட்சம் அப்படியே அரசிடம் உள்ளது. அதை திரும்பப் பெற்றுக்கொண்டால், தூர் வாரும் பணியை ஆளும்கட்சியினருக்கு கொடுத்து விடுவார்கள் என்பதால் பணத்தை திரும்பப் பெறாமல் உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x