Published : 23 Jul 2015 09:06 AM
Last Updated : 23 Jul 2015 09:06 AM

போரூர் ஏரியை தனியாருக்கு தாரைவார்ப்பதா?- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது

போரூர் ஏரியை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி நடப் பதாக குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று போரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 162 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போரூர் ஏரி, சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 800 ஏக்கர் பரப் பளவு கொண்டிருந்த இந்த ஏரி நாளடைவில் சுருங்கிவிட்டது. இந்நிலையில், போரூர் ஏரியின் நீர் நிறைந்த பகுதியில் பொதுப்பணித் துறை சார்பில் சாலை அமைக்க மண் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு, போரூர் ஏரியில் சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில், “போரூர் ஏரியை தனியாருக்கு தாரை வார்ப் பதற்காகவே ஏரியில் மண் கொட்டி சாலை அமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடு படுகின்றனர். ஆகவே, தமிழக அரசு போரூர் ஏரியை தனியார் வசம் கொடுக்கக் கூடாது’’ எனக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் நேற்று போரூர் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மக்களின் உயிர் ஆதார மாக உள்ள போரூர் ஏரியை தனியாருக்கு தாரை வார்ப்பது கொடுஞ்செயல் ஆகும். 800 ஏக்கராக இருந்த போரூர் ஏரி 300 ஏக்கராக குறைந்துள்ளது. அதிலும் பாதியில் சாலை போட்டு தனியாருக்கு கொடுக்கும் வேலை நடக்கிறது.

தனிப்பெரும் முதலாளிகளின் சந்தை பொருளாக தண்ணீர் மாற்றப்பட்டுவிட்டது. மனிதர்கள் கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்க முடியும். பிற உயிர்களான ஆடு, மாடு, மயில், மான் போன் றவை தண்ணீருக்கு எங்கே போகும்? ஆகவே இருக்கிற நீர் ஆதாரங்களையாவது அரசு பாதுகாக்க வேண்டும். போரூர் ஏரியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை பொதுப் பணித்துறை கைவிட வேண்டும். இல்லை எனில் தலைமைச் செயலகத்தை முற்றுகை யிடுவோம் என்று அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் உட்பட 162 பேரை போரூர் போலீ ஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x