Published : 23 Jul 2015 08:47 AM
Last Updated : 23 Jul 2015 08:47 AM

வாக்காளர் பட்டியல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க கூடுதல் அவகாசம்: தேர்தல் அதிகாரியிடம் திமுக கோரிக்கை

வாக்காளர் பட்டியல் தொடர்பான எதிர்ப்பு மனு சமர்ப்பிக்கும் காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என திமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் தொடர்பான பட்டியல்கள் அந்தந்த பகுதிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான எதிர்ப்புகள், மாற்றம் இருப்பின் தெரிவிக்கலாம். தவறுகள் இருப்பின் திருத்தம் செய்யலாம் என்றும் தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

வாக்காளர்கள் விவரம் இடம் பெற்றுள்ள குறுந்தகட்டில், விவரங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. எங்கள் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர் பட்டியல் விவரங்கள் தமிழில் வேண்டுகின்றனர்.

நீட்டிக்க வேண்டும்

மேலும், இந்த பட்டியல் கடந்த 20-ம் தேதிதான் எங்களுக்கு கிடைத்தது. இதுகுறித்த எதிர்ப்புகள் இருப்பின் அதை 24-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது மிகவும் குறைந்த காலக்கெடுவாகும். இந்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x