Published : 24 Jul 2015 10:36 AM
Last Updated : 24 Jul 2015 10:36 AM

ஏழாவது உலகம்: உடைய காத்திருக்கும் முட்டைகள்

ஈரோட்டைச் சேர்ந்த அந்த பெண் தலை கவிழ்ந்து அமர்ந் திருந்தார். தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும்படி மன்றாடினார். நள்ளிரவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியவர் குழந்தைகளுக்கு சாப்பிட பிஸ்கெட் பாக்கெட்டுகளை மட்டும் வாங்கி தந்து அழைத்து வந்திருந்தார்.

பசியில் கண் அடைத்த குழந்தைகள் புதிய சூழலை வித்தியாசமாக பார்த்து அங்குமிங்கும் ஓடியாடி கொண்டிருந்தன.

ஈரோட்டிலுள்ள தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அந்த பெண்மணிக்கு அலுவலகத் தில் இன்னொரு பெண்மணி பழக்கமாகியிருக்கிறார். அனைவரி டமும் நெருங்கி பழகிய அவர், கஷ்டத்திலிருந்து விடுபட எல்லோருக்கும் யோசனை சொல்லியிருக்கிறார். கேரளாவுக்கு வேலை நிமித்தமாக போகிறோம் என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு வரச் சொல்லியிருக்கிறார்.

போன பிறகுதான் ‘கருமுட்டை தானம்’ தருவதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் என்கிற விஷயமே தெரிய வந்திருக்கிறது. அதற்கான விளைவை அவர்கள் இன்றள வும் அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பெண்கள் தங்களது விருப்பப்படி கருமுட்டை தானம் செய்யலாம் என்கிறது சட்டம். தானம் கொடுக் கும் பெண்ணின் சம்மதத்துடன் பின் விளைவுகளை விளக்கிய பின்னர்தான் தானம் என்கிற அடுத்த கட்டத்துக்கே நகர்த்த முடியும். இதில் பலரும் தயக்கம் காட்டுவதால், சட்ட விரோத சக்திகள் களத்தில் குதித்திருக்கின்றன.

இவர்களின் குறி வறுமையில் இருக்கும் பெண்கள். இதற்காக புரோக்கர்கள் பலர் செயல்படுகிறார்கள். அலுவல கம் ஒன்றில் வேலைக்கு சேர்கிற மாதிரி சேர்வது, மெதுமெதுவாய் மனதைக் கரைப்பது என மெல்ல முன்னேறி, அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த சுழலில் பிடித்து தள்ளிவிடுகின்றனர். ருசி கண்ட பூனையாய் மறுபடி மறுபடி இதில் ஈடுபடும் பெண்கள் பலர் மீளவே முடியாமல் தவிக் கின்றனர்.

சென்னையில் சில மருத்துவ மனைகள் இதுபோன்ற முறைகேடு களில் ஈடுபட்டுவருவதைக் கண்ட றிந்த அரசு அமைப்புகள், பலமான கண்காணிப்பு வளையத்தை ஏற் படுத்தியதன் விளைவாக மோசடி கும்பல் இப்போது கேரளாவின் எர்ணாகுளம் பகுதிக்கு தங்களது ஜாகையை மாற்றியிருக்கின்றனர். இவர்களின் குறி பெரும்பாலும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சுற்றியிருக்கிற கிராமங் களைச் சேர்ந்த வறுமையில் உழலும் பெண்களே.

ஒருமுறை கருமுட்டை தானமாக தருவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை சன்மானமாக தருவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்ணை அழைத்து சென்றால், போக்கு வரத்து செலவுகள் போக ஐந்தா யிரம் ரூபாய் கமிஷன் என்பதால் புரோக்கர்களின் காட்டில் அடை மழை. கணவனை விட்டு பிரிந்த அந்த பெண் சொல்வதை வைத்துப் பார்த்தால், இந்த கருமுட்டை தானம் என்கிற மோசடி மிக பெரிய தொழிற்சாலைக்கு நிகராக இருப்பதாக தெரிகிறது.

இவர் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்க வைக் கப்பட்டிருந்ததாக சொல்கிறார். அவர் தங்கியிருந்த இடத்தில் மட்டும் 50 அறைகள் இருந்தன வாம். கிட்டத்தட்ட 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, இவரிடமி ருந்து கருமுட்டைகளை வலுக் கட்டாயமாக எடுத்திருக்கிறார்கள். 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதை சட்டம் அனுமதிக்கிறது. இந்த பெண் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தந்திருக்கிறார்.

ஹார்மோன் ஊசிமூலம்..

இந்த பெண்களுக்கு கருமுட் டைகளை வளர வைப்பதற்கான ஹார்மோன் ஊசிகள் செலுத்தப் படுகின்றன. பெண்களுக்கு ஒரு நேரத்தில் ஒன்று அல்லது 2 செழிப்பான முட்டைகள் வளர்வது என்பது சாத்தியமானது. ஆனால் ஹார்மோன் ஊசிகளின் உதவியுடன் நாலைந்து முட்டைகளை வளர வைக்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பல மருத்துவமனைகளில் புரோக் கர்கள் வழியாக மட்டுமே தானம் கொடுப்பதற்கு அணுக முடியும். தனியாக போனால் பாதுகாப்பு கருதி ஏற்றுக்கொள்ளவே மாட் டார்கள்.

தொடர்ச்சியான தானங்களால் உடல் பிய்ந்து போன அந்த பெண் ணுடன் சேர்ந்து வாழ கணவர் மறுத்துவிட்டார். குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற் காகத்தான் இதில் ஈடுபட்டேன் என அந்த பெண் அழுது புலம்பியதைக் கேட்பதற்கு குடும்பத்தில் யாரும் இல்லை.

கருமுட்டை தானத்தை முறைப் படுத்த மத்திய அரசு 2010-ல் மசோதா ஒன்றை கொண்டுவந்தது. இன்னமும் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றுவதுடன் கண் காணிப்பையும் தீவிரப்படுத்தா விட்டால் பல பெண்களின் கதி இப்படித்தான் இருக்கும்.

கட்டுரையாளர்: சரவணன் சந்திரன், பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு. saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x