Published : 27 Jun 2015 10:19 AM
Last Updated : 27 Jun 2015 10:19 AM

அரசு விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கை: மாநில அளவில் ஜூலை 3-ம் தேதி தேர்வு

அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான மாநில தேர்வு ஜூலை 3-ம் தேதி நடை பெற உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் உறுப்பினர் - செயலர் ஷம்பு கல்லோலிகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவ - மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க வசதியாக விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலம் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவு வசதியுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாநில அளவிலான தேர்வு ஜூலை 3-ம் தேதி சென்னை, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது. 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் இதில் கலந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு தடகளம், கைப்பந்து, வளைகோல்பந்து இறகுபந்து, நீச்சல் ஆகியவற்றுக் கான தேர்வும், கூடைப்பந்து (11-ம் வகுப்பு மட்டும்) தேர்வும் மாணவிகளுக்கு தடகளம், இறகுபந்து, கைப்பந்து, வாலிபால், வளை கோல்பந்து, கபடி ஆகியவற்றுக் கான தேர்வும் மதுரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் விளையாட் டரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறும்.

இதேபோல், மாணவர்களுக்கு கிரிக்கெட்டுக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கிலும் மாணவிகளுக்கு பளுதூக்கும் தேர்வு தஞ்சாவூர் கணபதி நகர் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், மாணவ-மாணவிகளுக்கு வாள்சண்டை தேர்வு சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும் மேற்குறிப்பிட்ட தேதியில் காலை 8 மணிக்கு நடைபெறும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்ப படிவத்தை >www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் கட்டணம் ரூ.10-ஐ தேர்வு நடத்தும் அலுவலரிடம் நேரில் சமர்ப்பித்து தேர்வில் கலந்துகொள்ளலாம். மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x