Published : 01 Jun 2015 07:37 AM
Last Updated : 01 Jun 2015 07:37 AM

பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்: கால் டாக்ஸி ஓட்டுநர் கைது

நீலாங்கரையில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் செய்த கால் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசிப்பவர் லதா(45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நீலாங்கரை காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவில் வந்த லதா, பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "வீட்டு வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறேன். வேலை முடிந்து கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது, எனக்கு அருகே ஒரு கால் டாக்ஸி வந்து நின்றது. அதன் ஓட்டுநர் என்னிடம் முகவரி கேட்டார். நான் கூறிய பிறகு உங்களை வழியில் இறக்கிவிடுகிறேன் எனக் கூறி என்னை காரில் ஏற்றிக்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு என்னை காரில் கூட்டிச் சென்று கத்தி முனையில் மிரட்டி என்னை பலாத்காரம் செய்துவிட்டார்" என்று கூறப்பட்டிருந்தது. காரின் பதிவு எண்ணையும் அவர் கூறினார்.

புகாரின்பேரில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். காரின் பதிவு எண்ணை வைத்து துப்புத் துலக்கியதில் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ்குமார்தான் லதாவை பலாத்காரம் செய்தார் என தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2010-ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் இதேபோல காரில் கடத்தி ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கும் சுரேஷ்குமார் மீது இருப்பது தெரிந்தது.

கண்காணிக்கப்படுவது எப்போது?

டெல்லியில் கால் டாக்ஸியில் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. அதைத் தொடர்ந்து கால் டாக்ஸிகளை கண்காணிக்க முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. ஜிபிஎஸ் கருவி, ஓட்டுநர் பெயர் மற்றும் முகவரியை சரியாக பதிவு செய்து வைத்தல் உட்பட பல விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x