Last Updated : 05 Jun, 2015 08:40 AM

 

Published : 05 Jun 2015 08:40 AM
Last Updated : 05 Jun 2015 08:40 AM

குறுவை சாகுபடிக்கான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

குறுவை சாகுபடிக்கான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து கேட்டுப் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படும். இதற்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ம் தேதி அணையை திறக்க வாய்ப்பில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து விவசாய சங்கங்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன. அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் (காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்):

தற்போது மேட்டூர் அணையில் 72 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ள நிலையில் சாகுபடிக்காக அணையை திறப்பது நல்லதல்ல. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து போதிய மழை பெய்தால் கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு ஜூன் மாத இறுதிக்குள் 100 அடியை எட்டலாம். அந்த சூழலில் தண்ணீரை திறக்க வேண்டும்.

மேட்டூர் அணை திறப்பு விவகா ரத்தில் பருவ மழை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு அறிவியல் ரீதியான முடிவுகளைத்தான் எடுக்க வேண்டுமே தவிர, அரசியல் நிர்பந்தங்களுக்கு இடம் தரக் கூடாது. வேளாண்மைத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளின் பிரதி நிதிகள் கூடி விவாதித்து அணையை எப்போது திறப்பது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண் டுள்ள முடிவை எங்கள் சங்கம் வரவேற்கிறது.

கே.பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்):

கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை அந்த மாநில அரசு விதிமுறைகளை மீறி கோடை காலத்தில் பயன்படுத்தி வருகிறது.

மாறாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது மட்டும் போதாது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவற்றை அமைத்தால்தான் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்கும். ஆனால் மத்திய அரசு இந்த அமைப்புகளை ஏற்படுத்த மறுத்து வருகிறது.

இந்த சூழலில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். சட்டப்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றத் தர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

குறுவை சாகுபடி இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க மாநில அரசு முன்வர வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன் (தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்):

கடந்த ஆண்டு கர்நாடக அணைகள் நிரம்பியதால் வழிந்தோடிய உபரி நீரை மட்டுமே கர்நாடகம் தமிழகத்துக்கு தந்துள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தர வேண்டிய தண்ணீரை தரவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும் சேர்த்தால் சுமார் 40 டி.எம்.சி.க்கும் மேல் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வர வேண்டும். ஆகவே, இந்த தண்ணீரை பெறுவதன் மூலம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடி நடைபெறுவதை உறுதிப்படுத்த முடியும்.

குறுவை சாகுபடியை பாதுகாக்க மட்டும் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. நடுவர் மன்ற உத்தரவுப்படி நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதன் மூலம் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் சட்ட ரீதியான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக வலியுறுத்துகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x