Published : 29 Jun 2015 03:50 PM
Last Updated : 29 Jun 2015 03:50 PM

ரசாயனங்களை பயன்படுத்துவதால் பாதிப்பு: விளை நிலங்களில் அரிதாகி வரும் தழையுரம் பயன்பாடு

விவசாயத்தில் படிப்படியாக அருகி வரும் தழையுரம் பயன்பாட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஊரறிந்த ரகசியம் தான். இருப்பினும் அதனுடைய விபரீதங்களைப் பற்றி நின்று செவிமடுக்கக் கூட நேரமில்லாத வகையில் மக்கள் வேகமய வாழ்க்கைக்கு ஆட்பட்டுள்ளனர். இந்நிலையில், நூடுல்ஸ் உணவில் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருந்தது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், விளைநிலங் களில் சேரும் ரசாயனங்கள் மண்ணில் தேங்கி, அதில் சாகுபடி செய்யப்படும் காய்கறி, பழம், தானியம், மலர் ஆகியவற்றில் ரசாயனம் சேகரமாவது குறித்தும் விவாதங்கள் அனல் பறந்து வருகிறது. இந்த ரசாயனங்கள் உடலின் தேவைக்கு அதிகமான விகிதத்தில் விளைபொருட்களில் இருப்பதால் மனித இனம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் வேகம் எடுத்துள்ளது.

விளைவிக்கப்படும் பொருட்களில் சாகுபடிக்கு பிறகு நடக்கும் கலப்படங்களை கடும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தான் தடுக்க முடியும். அதேநேரம் விளையும்போதே விளைபொருட்களில் ரசாயனங்கள் கலப்பதைத் தடுக்க அரசு கடும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, தழையுரம் பயன்பாடு, இயற்கை வேளாண்மை போன்றவற்றை அரசு தீவிரமாக ஊக்குவிப்பது தான் சிறந்த வழி என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் சிவலிங்கம் கூறியதாவது:

ரசாயனங்கள் மூலம் விளைவிக்கப்படும் உணவு தானியங்களின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு தற்போது தான் தீவிரமடைந்து வருகிறது. இந்நேரத்தில் விவசாயிகள் மத்தியில் தழையுரம் பயன்பாட்டை அதிகரிக்கவும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சணப்பு, தக்கைப் பூண்டு போன்ற செடிகளின் விதையை மழைக்காலங்களில் விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்கினால் மண் வளத்தை விரைவாக மீட்க முடியும்’ என்றார்.

சின்னம்பள்ளியைச் சேர்ந்த சிவகுமார் கூறும்போது, ‘முந்தைய காலங்களில் நன்செய் நிலப்பரப்பில் முக்கால் பாகம் தழையுர பயன்பாடு இருந்தது. தற்போது அரிதாக சில விவசாயிகள் மட்டுமே வயலில் தழையுரம் வளர்த்து வயலடிக்கின்றனர். இந்நிலையை மாற்றி மீண்டும் தழையுர பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x