Last Updated : 24 Jun, 2015 09:16 AM

 

Published : 24 Jun 2015 09:16 AM
Last Updated : 24 Jun 2015 09:16 AM

அடுத்தது திமுக ஆட்சிதான்: மதிமுக மாநில நிர்வாகி அழகுசுந்தரம் உறுதி

‘அடுத்து திமுக ஆட்சிதான் அமையும்’ என்று மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கும் மதிமுகவில் எந்த நம்பிக்கையோடு இருக்கிறீர்கள்?

மதிமுக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, அது ஒரு லட்சிய பாசறை. ‘என் பின்னால் வந்தால் பதவிகள் கிடைக்காது, பட்டங்கள் கிடைக்காது, கண்ணீரும் செந்நீரும் சிந்த வேண்டியது வரும்’ என்று மதிமுக தொடங்கப்பட்ட போதே, தன் பின்னால் அணிவகுத்து வந்த தொண்டர்களுக்கு வைகோ தெளிவுபடுத்திவிட்டார். அந்த அடிப்படையில் 22-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மதிமுக ஒன்றும் இளைத்துவிடவில்லை, தொண்டர்களும் களைத்துவிடவில்லை. எந்த நோக்கத்துக்காக திராவிட இயக்கத்தை பெரியாரும், அண்ணாவும் தொடங்கினார்களோ, அந்த கொள்கைகளை மதிமுக அடர்த்தி குறையாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடுதான் வைகோவுக்குப் பின்னால் இருக்கிறோம்.

இந்தத் தேர்தலுக்கு நீங்கள் எப்படித் தயாராகிறீர்கள்?

செப்டம்பர் 15-ம் தேதி பல்லடத்தில் நடைபெற இருக்கும் அண்ணாவின் பிறந்த நாள் மாநாடு, மதிமுகவின் அடுத்த வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கும். வைகோவின் அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும்.

வைகோவை முதல்வராக்குவோம் என்று மேடைதோறும் முழங்கிய தமிழருவி மணியன், அதில் இருந்து பின்வாங்கிவிட்டாரே?

அதை அண்ணன் தமிழருவி மணியனிடம்தான் கேட்க வேண்டும்.

மோடி - ஜெயலலிதா ஒப்பிடுக.

தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிய விதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மோடியும், ஜெய லலிதாவும் மோடிமஸ்தான்களையே வென்று விடும் அளவுக்கு மக்களை ஏமாற்றி யிருக்கிறார்கள்.

திமுகவுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

தமிழக அரசியலை பின்னோக்கிப் பார்த்தால், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1991-ல் அதிமுக ஆட்சி, 1996-ல் திமுக ஆட்சி, 2001-ல் அதிமுக ஆட்சி, 2006-ல் திமுக ஆட்சி, 2011-ல் அதிமுக ஆட்சி. அந்த வகையில் 2016-ல் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றே கருதுகிறேன்.

திமுக கூட்டணியில் இடம்பிடித்தால், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா?

அதுபற்றிய கேள்வி இப்போது எழவில்லை.

வைகோ நல்லவரா? வல்லவரா?

வைகோ நல்லவர் மாத்திரமல்ல, வல்லவர் என்பது உலகறிந்த உண்மை. வாக்குக்கு பணம் கொடுத்து வாகை சூடுவதுதான் வல்லமைக்கான இலக்கணம் என்றால், வைகோ வல்லவர் இல்லை என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x