Published : 27 May 2015 04:12 PM
Last Updated : 27 May 2015 04:12 PM

அம்மா உணவகங்கள் நடத்த அரசு தடுமாற்றம்: ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் அம்மா உணவங்களை உரிய முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு தடுமாறி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு:

"ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் 201 அம்மா உணவகங்களை திறந்து வைத்திருக்கிறார். இந்த உணவகங்களின் திறப்பு விழா தனியொரு நபரின் விடுதலைக்காக இவ்வளவு நாள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டது என்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

அப்படித் திறக்கப்பட்ட மறுநாளே போதிய உட்கட்டமைப்பு வசதியும், பணியாளர்களும் இல்லாத காரணத்தால் திண்டுக்கல் அம்மா உணவகத்தில் உணவு பரிமாற முடியாமல் தவித்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.

மக்களுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை எந்த அளவுக்கு இந்த அரசு அவசர அவசரமாக திறந்து வைக்கிறது என்பதற்கும், அத்திட்டங்கள் எவ்வளவு மோசமாக பராமரிக்கப்படுகிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தற்போது வெளிவரும் செய்திகளின்படி, ஒரு உணவகத்தை நடத்த ஒரு மாதத்திற்கு 2.13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும், அதே சமயத்தில் அந்த உணவகம் மூலம் கிடைக்கும் வருமானம் 1.08 லட்சம் மட்டுமே என்றும் தெரியவருகிறது.

இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த அரசு முன் வர வேண்டும். பல உணவகங்களில் உணவு தயாரிக்கத் தேவையான அரிசி உள்பட பல்வேறு பொருள்கள் போதிய அளவில் இல்லை என்றும் செய்தி வருகிறது.

இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கும் மாநில அரசு, இந்த உணவகங்களை நடத்துவதற்கு தேவையான நிதியும் இல்லாமல் தடுமாறுகிறது. ஆனால், இருக்கின்ற உணவகங்களை ஒழுங்காக நடத்துவதற்குப் பதிலாக தேர்தலை மனதில் வைத்து மேலும் புதிய உணவகங்களை அரசு திறந்து வைக்கிறது.

பல்வேறு அறிவிப்புகளில் ஒன்றினைத் தேர்வு செய்து, அதன் மீதும் அவசர கோலத்தில் நடவடிக்கை எடுத்து, எப்படியொரு திட்டம் தோல்வியைச் சந்திக்கிறது என்பதற்கு அம்மா உணவகம் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

வேலை வாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பை பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றி யோசிக்காமலேயே மெகா அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

நான்கு வருட அறிவிப்புகளும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளில் அதிமுக அரசு மக்கள் வரிப்பணத்தைச் செலவிடுவதும் மிகவும் ஆபத்தான போக்கு. இது வருங்கால சமுதாயத்திற்கு நிச்சயமற்ற எதிர்காலத்தையும், கடன் சுமை மிகுந்த தமிழகத்தையும் கொடுத்து விடும்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x