Last Updated : 30 May, 2015 03:25 PM

 

Published : 30 May 2015 03:25 PM
Last Updated : 30 May 2015 03:25 PM

அடுத்த சீஸனுக்குள் ரூ. 20 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறையில் கூடுதல் படகுதளம்

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையை சீஸன் நேரத்தில் பார்வையிட முடியாமல் பயணிகள் ஏமாற்றமடைவது தொடர்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அடுத்த சீஸனுக்குள் 50 மீட்டர் நீளத்துக்கு தனித்துவம் மாறாமல் கூடுதல் படகு தளம் அமைக்கப்படுகிறது.

`திரில்’ அனுபவம்

கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றன. 700 மீட்டர் தூரத்துக்கு கடலில் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறைக்கு சென்று திரும்பி வருவதை உலகெங்கும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திரில் அனுபவமாக உணர்கின்றனர். சாதாரண நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டாலும் சீஸன் நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் கூடும் சுற்றுலா பயணிகள் பாதி பேருக்கு மேல் விவேகானந்தர் மண்டபம் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

காத்திருப்பு

அதேவேளை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்திலும், விவேகானந்தர் பாறையிலிருந்து கரைக்கு திரும்புவதற்கும் பல மணி நேரம் சுற்றுலா பயணிகள் காத்து கிடக்கும் சூழல் தொடர்கிறது. கடந்த நவம்பர் மாத சீஸனின்போது சுற்றுலா பயணிகளின் நெருக் கடியை உணர்ந்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் விவேகானந்தர் பாறை, மற்றும் படகு இல்லத்தில் பொறியாளர் குழுவுடன் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இந்த நெருக்கடிக்கு விவேகானந்தர் பாறை படகுதளத்தில் போதிய இடவசதி இல்லாததே முதல் காரணம் என்பது கண்டறியப்பட்டது. தற்போதுள்ள 37 மீட்டர் படகு தளத்தில் ஒரு படகு பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் புறப்படும் வரை, இன்னொரு படகு நடுக்கடலில் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே படகு தளத்தை விரிவுபடுத்தினால் இப்பிரச்சினை க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என முடிவு செய்யப்பட்டது.

அடுத்த சீஸனுக்குள்

தற்போதைய கோடை சீஸன் முடியும் நிலையில் அடுத்த நவம்பர் மாத சீஸனுக்குள் கூடுதல் படகு தளம் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் மீன்பிடி துறைமுக அதிகாரிகள் கூறும்போது, `விவேகானந்தர் பாறைக்கான தனித்துவத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் கூடுதலாக 50 மீட்டர் நீளத்தில் படகு தளம் அமைக்கப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் 3 படகுகளில் 500 பேர் வரை விவேகானந்தர் பாறைக்கு வர முடியும்.

தற்போது ஒரு படகில் வரும் 150 பேர் படகு தளத்தில் இறங்கிய பின்பே மற்ற படகு வந்து நிற்க முடியும். படகு தளத்தில் போதிய வசதியில்லாததால் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளுக்குமே தற்போது முழுமையாக சவாரி இல்லாத நிலை உள்ளது.

சீஸன் நேரத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் மட்டுமே விவேகானந்தர் பாறைக்கு வர முடிகிறது. கூடுதல் படகு தளம் அமைக்கப்பட்டால் 30 ஆயிரம் பேர் வந்து செல்லலாம்.

ரூ. 20 கோடி மதிப்பு

எனவே கன்னியாகுமரி சுற்றுலா மையத்தை மேலும் நவீனப்படுத்தும் வகையில் அரசு நவீன படகு தளத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைக்கவுள்ளது. இதற்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த கூடுதல் படகுதளத்துக்கு தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், மீன்வளத்துறை, துறைமுக பொறியாளர் குழுவினர் 3 கட்ட ஆய்வை முடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x