Last Updated : 29 May, 2015 09:33 AM

 

Published : 29 May 2015 09:33 AM
Last Updated : 29 May 2015 09:33 AM

வழிபாட்டுத் தலங்களில் கட்டுமான விதிமீறல்கள்: சர்ச் விபத்துக்கு பிறகாவது விழிக்குமா அரசுத் துறைகள்?

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல வழிபாட்டுத் தலங்களில் கட்டுமானம், புனரமைப்பு பணி களின்போது அப்பட்டமாக விதிமீறல்கள் நடப்பதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள்.

திருநெல்வேலி புதிய பஸ்நிலை யம் அருகே, செயின்ட் சேவியர் காலனியில் பீட்டர் சி.எஸ்.ஐ. சர்ச் கட்டுமானத்தின்போது நேற்று முன்தினம் இரவு கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசுத் துறைகள் மற்றும் பொது மக்களின் கவனம் கட்டுமானங்கள் குறித்து திரும்பியிருக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சி அனுமதி பெற்றுத்தான் இந்த சர்ச் கட்டப்பட்டது. ஆனால், கட்டுமானத்தின்போது பல்வேறு விதிமீறல்கள் செய்யப்பட்டதும், முறைப்படியான பொறியாளரின் கண்காணிப்பு, ஆலோசனை இல்லாததுமே விபத்துக்கான காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த சர்ச் கட்டுமானம் பல மாதங்களாகத் தொடர்ந்து கொண் டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது விதிமீறல்கள் குறித்து சர்ச் நிர்வாகத்தினரிடம் சுட்டிக்காட்டி, கட்டுமானத்தை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால், பல்வேறு நிர்ப்பந்தங்களை அளித்து அதிகாரிகளை வாயடைத் துப்போக செய்துவிட்டு, விதிமீறி கட்டுமானத்தைத் தொடர்ந்திருக் கிறார்கள். ஒரே நேரத்தில் பீம் அமைத்து, அதன் மீது கான்கிரீட் கூரை அமைக்கும் பணியை மேற்கொண்டதால்தான் விபத்து நேர்ந்துள்ளது.

5 ஆண்டுகளில்

திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டு களில் மட்டும் சர்ச் கட்டுமான பணியின்போது நடைபெற்ற விபத் துகளில் இது 5-வது விபத்தாகும். இதற்குமுன் திருநெல்வேலி பிஷப் வளாகத்தில் கட்டப்பட்ட சர்ச், பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட சர்ச், பாவூர் சத்திரம் பகுதியில் கட்டப்பட்ட சர்ச், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கட்டப்பட்ட ஜெபக்கூடம் ஆகிய வற்றில் விபத்துகள் நடைபெற்று சிலர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நடவடிக்கைக்குத் தயக்கம்

பொதுவாகவே வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படும்போது, கட்டுமான விதிகள் பின்பற்றப் படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும், விதிமீறினால் கட்டுமானத்தை நிறுத்தவும், தடை செய்யவும் அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுப்பதில்லை. அவற்றை கண்டுகொள்வது மில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே கூறப்பட்டு வருகின்றன.

தீவிரம் காட்ட வேண்டும்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் கூறியதாவது:

கட்டுமான விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும். கட்டிடங்களுக்கு அனுமதி பெற்றாலும் விதிமீறல் களை அப்பட்டமாகவே செய்கி றார்கள். இதை தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மீது நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து விதிமீறல் கட்டிடங்களை இடிக்கவும், அவ்வாறு இடிக்கும் வரை நாள் தோறும் அபராதம் வசூலிக்கவும் நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது.

மாநகராட்சி எல்லை யில் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விதிமீறல்கள் கட்டிடங்களை இடிக்கவோ, தடை செய்யவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றார்.

கட்டுமானங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் விதிமீறல்கள் குறித்த விவகாரங்கள் குறித்து பேசுவதற்காகவே மாதந்தோறும் உள்ளூர் திட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தக் கூட்டங்களை சம்பிரதாயத்துக்கு நடத்தாமல் விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுமான இடிபாடுகள், உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x