Published : 27 May 2015 07:55 AM
Last Updated : 27 May 2015 07:55 AM

மோடி அரசால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம்: தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

நரேந்திர மோடி அரசால் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டம், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு, இணை அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண் டாடினார். மோடி அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சியை கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

கடந்த 8 மாத அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் முடங்கியிருந்தது. மாநில அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, அதன் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய மத்திய அரசின் திட்டங்களும் முடங்கியிருந்தன.

பொதுப்பணித்துறை ஒப்பந்த தாரர்கள் கூறிய ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிப்பதற்கு பதிலாக, புகார் கூறிய ஒப்பந்த தாரர்கள் மீதே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியுள்ளார். கடைசி ஓராண்டிலாவது ஊழலற்ற, வெளிப்படையான, விரைந்து செயல்படும் நல்லாட்சியை அவர் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய சக்தியாக விளங்கும். திமுக தலைவர் கருணாநிதியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தது அரசியல் நாகரிகத்தின் அடையாளம்.

முத்ரா வங்கி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா, ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு, மேக் இன் இந்தியா என பாஜக அரசின் ஓராண்டு சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.15 கோடியில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை, நவீன நகரங்கள், இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸ் ஆகியோரை மீட்டது என தமிழகத்துக்கு மோடி அரசால் கிடைத்த நன்மைகள் ஏராளம்.

மோடி வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கின்றன. பிரதமரின் பயணத்தால் வெளிநாட்டு முதலீடு கள் குவிந்துள்ளன. பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் கிடைக்கிறது. மோடி வெளிநாடு களுக்கு செல்வதை தொலைக் காட்சிகளில் மக்கள் பார்க்கின்றனர். ஆனால், 56 நாட்கள் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் காணாமல்போன ராகுல் காந்திக்கு, மோடி அரசை குறை கூற எந்த தார்மீக உரிமையும் இல்லை.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x