Published : 20 Apr 2015 10:03 AM
Last Updated : 20 Apr 2015 10:03 AM

சென்னையில் விழா: திருவெம்பாவை பாடல்கள் குறுந்தகடு வெளியீடு

சைவ ஞானிகளுள் ஒருவரான மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் சிடி வடிவில் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன.

மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மறைந்த டாக்டர்.சங்கர நாராயணன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் சங்கீதா சிவகுமார் அந்த பாடல்களை பாடி தற்போது அவை சிடியாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு விழா டாக்டர் சங்கர நாராயணன் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.ராம் பேசும்போது, “புராணங்களும் இதிகாசங்களும் நமக்கு தெரிந்த அளவுக்கு நமது வரலாறு நமக்கு தெரியவில்லை.

மாணிக்கவாசகர் திருப்பெருந் துறையில் கோயில் கட்டினார் என்பதற்கு சான்றே சமீபத்தில் தான் கிடைத்துள்ளது. வரலாற்றில் யார் வந்தார்கள், என்ன நோக்கத்துக்காக வந்தார்கள் என்பது முக்கியமில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் முக்கியம்” என்றார்.

டாக்டர் சங்கர நாராயணின் மகனான டாக்டர் கர்னல் கிருஷ்ணன் அவரது தந்தையைப் பற்றி பேசும்போது, “அவர் இசையிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார். சிகிச்சை வேண்டி வருபவர் எதிரியாக இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுவார். மாணிக்கவாசகரின் 30 பாடல்களுக்கு அவர் இசையமைத் துள்ளார்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.சி.சி. கல்லூரியின் உடற்கூறு இயல் இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன், மாணிக்கவாசகரின் சில பாடல்களுக்கு அர்த்தம் கூறி விளக்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், “ திருவெம்பாவை பாடல்கள் மாணிக்கவாசகர் பிறந்த ஊரிலேயே பலருக்கு தெரியவில்லை. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாடல்கள் பாடப்படும் அளவுக்கு திருவெம்பாவை பாடப்படுவதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x