Last Updated : 22 Apr, 2015 10:48 AM

 

Published : 22 Apr 2015 10:48 AM
Last Updated : 22 Apr 2015 10:48 AM

பார்வையற்றோர் சாலையைக் கடக்க சத்தம் எழுப்பும் சிக்னல்கள்: சென்னையில் விரைவில் அறிமுகம்

பார்வையற்ற மாற்று திறனாளிகள் சாலைகளை கடக்க உதவும் ‘சத்தம் எழுப்பும் போக்குவரத்து சிக்னல்கள்’ சென்னையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பொது இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழத்தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் இது தொடர்பாக பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகின்றன. இந்த வரிசையில் சாலையை கடக்க உதவும் ‘சத்தம் எழுப்பும் போக்குவரத்து சிக்னல்கள்’ சென்னையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பச்சை விளக்கு எரிந்ததும் பீப் ஒலி ஒலிக்கத் தொடங்கும். 20 வினாடி கால அளவீடு என்றால், முதல் 15 வினாடிகளுக்கு ஒரு வினாடிக்கு ஒன்று என சத்தம் வெளியாகும். கடைசி 5 வினாடிகளில் வினாடிக்கு 3 பீப் சத்தம் ஒலிக்கும். இது போக்குவரத்து தொடங்கவுள்ளது என்ற எச்சரிக்கையை பார்வையற்றோருக்கு கொடுக்கும். இந்த திட்டம் ஏற்கெனவே டெல்லி மற்றும் பெங்களூருவில் அமலில் உள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக ரூ.75 லட்சம் செலவில் 150 இடங்களில் இத்திட்டம் அமலாக்கப்படவுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ ஏற்கெனவே உள்ள சிக்னல்களில் இந்த ஒலி பதிவு செய்யப்படும். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயன்படுத்தும் 150 சிக்னல்களை கண்டறிந்து வருகிறோம். அவர்கள் வேலை பார்க்கும் அரசு அலுவலகங்களுக்கு அருகிலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளுக்கு அருகிலும் இவை பொருத்தப்படும். இதற்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

இது குறித்து பார்வையற்ற மாற்றுத் திறனாளியான ர.ராஜா கூறும்போது, “மாற்றுத் திறனாளிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சாலைகள் வடிவமைக்கப்படுவதால், பல சிக்னல்களில் வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதில்லை. சிக்னல் விழுந்தாலும் வாகன ஓட்டிகள் அதை மதிக்காததால் எங்களுக்கு அதிக அபாயம் உள்ளது. தலைமை செயலகம் அருகில் கூட பாதுகாப்பாக சாலையை கடக்க முடியவில்லை. இந்நிலையில் அரசு இத்தகைய வசதியைப் பற்றி யோசித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x