Published : 25 Mar 2015 13:19 pm

Updated : 25 Mar 2015 15:11 pm

 

Published : 25 Mar 2015 01:19 PM
Last Updated : 25 Mar 2015 03:11 PM

காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்: ஸ்டாலின்

தகுதி இழந்துவிட்ட அரசால் விளம்பரத்துக்காக வைக்கப்படும் வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2015-16 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, அவையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு அவையில் திமுகவினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை இதனையடுத்து திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அவையில் மு.க.ஸ்டாலின் வாசிக்கவிருந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கலாகும் நிலையில், அ.தி.மு.க. அரசின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை தமிழ்நாட்டின் ஏடுகள் பல, கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து எழுதி வருகின்றன.

சீர் குலைந்து விட்ட நிர்வாகம், சிதைந்து விட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றினால், அ.தி.மு.க. அரசின் நிதி நிலை, நெருக்கடி வலையில் சிக்குண்டு விட்டது; ஆழமான கடன்களில் மூழ்கித் திவாலாகும் கட்டத்தை எட்டி விட்டது. மின்சார வாரியத்தின் கடன் மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய்; போக்குவரத்துக் கழகங்களில் நிதி இழப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்; பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாய்.

செயலற்ற அரசு என்பதால், அ.தி.மு.க. அரசு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகளைத் தேடும் திறனின்றித் திண்டாடுகிறது. தமிழகத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. உலக வங்கியோ, ஆசிய வளர்ச்சி வங்கியோ தமிழக அரசுக்கு நிதியேதும் வழங்கிடத் தயக்கம் காட்டுகின்றன.

தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகத்திற்குக் கிடைத்திருப்பது, கடைசி இடமான 18வது இடம். தமிழ் நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், தி.மு.க. ஆட்சியில் 2009-2010இல் 29.18 சதவிகிதம். அ.தி.மு.க. ஆட்சியில் 2012-2013இல் 1.31 சதவிகிதம். வேளாண்மை வளர்ச்சியோ மைனஸ் 12 சதவிகிதமே!

இந்த நிதி ஆண்டுக்கான (2014-15) பற்றாக்குறை 25 ஆயிரத்து 714 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது அடுத்த (2015-2016) நிதி ஆண்டில் 28 ஆயிரத்து 579 கோடியாக உயரப் போகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்கள்?

பற்றாக்குறையை உயர்த்தி - கடன்தொகையையும் உயர்த்தி - தொழில் வளர்ச்சியிலும், உற்பத்தி வளர்ச்சியிலும் தமிழகத்தைக் கடைசி இடத்திற்குக் கொண்டு வந்துள்ள அ.தி.மு.க. அரசு - ஊழல் பட்டியலில் மட்டும் அனைத்து இந்தியாவிலேயே முதல் இடத்தை எட்டியிருக்கிறது. முட்டை வாங்குவதிலும், பருப்பு வாங்குவதிலும் ஊழல் - நெடுஞ்சாலைப் பணிகளிலே ஊழல் - மாநகராட்சி களிலே மண்டிக் கிடக்கும் ஊழல் - ஆவின் பாலில் ஊழல் - மின்சாரம் வாங்குவதிலே கோடி கோடியாக ஊழல் - அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடுவதிலே ஊழல் என்று அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம், ஊழல்!

திருமண நிதி உதவித் திட்டத்திலிருந்து, இலவசப் பசு வரை, நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏழைப் பயனாளிகள் வழங்க வேண்டிய லஞ்சம்; அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கும், மாறுதலுக்கும் கொடுக்க வேண்டிய லஞ்சம்; பட்டியலிடப்பட்டு ஏடுகளில் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. அரசின் அடி முதல் நுனி வரை லஞ்சம் - ஊழல் புரையோடிப் புற்று நோயாகப் பரவிவிட்டது. ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு அஞ்சி, அரசின் நேர்மையான அதிகாரிகள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள்.

தமிழகத்தில் 85 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கிடக்கும் நிலையில்; அரசுத் துறைகளில் நான்கு இலட்சம் காலிப் பணியிடங்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு முறை கூட அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச முன் வரவில்லை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அலுவலர்கள், வேறு வழியின்றிப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடுந்தேளாகக் கொட்டும் கடன்கள்; கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சட்டம் - ஒழுங்கு; கரை புரண்டோடும் லஞ்சம் - ஊழல்; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்து விட்ட நிர்வாகம்; விவசாயிகள், மீனவர், நெசவாளர் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத பெரும் பின்னடைவுகள்; குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட ஜனநாயக மரபுகள் எனத் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்திடும் தார்மீகத் தகுதியை அ.தி.மு.க. அரசு இழந்து விட்டது. விளம்பரத்திற்காக வைக்கப்படும் கவைக்குதவாத வெறும் காகித அறிக்கையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டப்பேரவைதமிழக பட்ஜெட்மு.க.ஸ்டாலின்திமுக வெளிநடப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author