

கும்பகோணம்: ‘டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை நெற்பயிர் கருகி கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதே?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “வரும் காலங்களில் உங்களிடம் கூறுவோம்” என்று வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
அவர் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதுவரை சுமார் 5,000 பேர் பதிவு செய்துள்ள நிலையில், 50 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளும், மேலும் 50 பேருக்கு திறன் பயிற்சிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முகாமில் பங்கேற்றுள்ள நிறுவனங்களில் உரிய தகுதி பெற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக நெல் மூட்டைகள் மற்றும் சாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டு வீணானதற்கு முந்தைய அரசே காரணம். தற்போதைய ஆட்சியில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, ‘ஆற்றில் நீர் வரவில்லை. நிலத்தடி ஏற்பட்டு குறைந்துவிட்டது. போதிய அளவில் மின்சாரம் இல்லை. டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை நெற்பயிர் கருகி கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதே?’ என்ற கேள்விக்கு, “வரும் காலங்களில் உங்களிடம் கூறுவோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பரமேஸ்வரி வரவேற்றார். திருச்சி மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் அருணகிரி திட்ட விளக்கவுரையாற்றினார்.
வேளாண்மை துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் விழா உரையாற்றி, தனியார் நிறுவனங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் திருமலை, சாஸ்திரா பல்கலைக்கழக முதல்வர் சாந்தி, தஞ்சாவூர் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் தஞ்சாவூர் மாவட்ட திறன் அலுவலர் குழந்தைவேலு நன்றி கூறினார்.