“மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக” - தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

“மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக” - தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு இடங்களில் மின் வெட்டு பிரச்சினை நீடிப்பது, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் மின் கட்டணம் வசூலிப்பதாக எழும் புகார்கள் குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கிறது.

எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்துக்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்துக்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக” - தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
“சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்” - மனைவி கீதாஞ்சலி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in