Published : 12 Mar 2015 12:43 PM
Last Updated : 12 Mar 2015 12:43 PM

நிலச்சட்டத்தை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த கட்சிகளை வரலாறு மன்னிக்காது: வைகோ

'பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்துள்ளதை வரலாறு மன்னிக்காது' என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

மேலும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து மக்கள்புரட்சி வெடித்தே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு நாடு முழுவதும் எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தியுள்ள பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, மக்கள் விரோத நிலப்பறிப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த 52 திருத்தங்களை நிராகரித்துவிட்டு, பெயரளவில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, மோடி அரசு இச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி உள்ளது.

இந்தியாவின் முதன்மையான விவசாயத் தொழிலின் முதுகெலும்பை முறித்துள்ள மோடி அரசுக்குத் துணைபோன அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்துள்ளதை வரலாறு மன்னிக்காது.

நிலம் கையகப்படுத்தும்போது அரசு மற்றும் தனியார் கூட்டுத் திட்டங்களாக இருந்தால் 70 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். தனியார் துறை திட்டமாக இருப்பின் 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலையும், மாநில அரசுகளின் திட்டங்களாக இருந்தால் 100 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 இல் இருந்ததை ரத்து செய்துவிட்டு புதிதாக 10 (ஏ) என்ற பிரிவு அவசரச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இதன்படி பாதுகாப்புத்துறை, தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக கட்டமைப்பு, சமூக அடித்தள கட்டமைப்பு திட்டங்களுக்காக தேவைப்படும் நிலங்களை நில உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி கையகப்படுத்தலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை மேற்கண்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கொண்டு வந்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பதற்கு இச்சட்டம் வகை செய்கிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த முக்கியமான திருத்தம் மோடி அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து சமூக மதிப்பீட்டு அறிக்கை (Social Impact Assessment) கட்டாயம் என்று இருந்ததை அவசரச் சட்டத்தில் மோடி அரசு நீக்கிவிட்டது. இதன் மீதான திருத்தமும் ஏற்கப்படவில்லை.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் முக்கிய பிரிவுகளை ரத்து செய்யாமல் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி உள்ள மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்து ‘மக்கள்புரட்சி’ வெடித்தே தீரும் என்று எச்சரிக்கை செய்கிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x