Published : 06 Feb 2015 09:46 AM
Last Updated : 06 Feb 2015 09:46 AM

நூற்றுக்கணக்கில் கார்கள், தெருவுக்குத் தெரு விருந்து: ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது என்றார் மத்திய நீர் வழி மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுப்ரமணியத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திருச்சி வந்த அவர், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆளுங்கட்சியினர் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்காமல் அவர்கள் முறைகேடாக சம்பாதித்ததிலிருந்து சிறிதளவு மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என ஒன்று இங்கே செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. நூற்றுக்கணக்கில் கார்கள், ஆயிரக்கணக்கில் வெளியூர் ஆட்கள், தெருவுக்குத் தெரு விருந்து நடக்கிறது.

சாத்தான்குளத்தில் ஒருமுறை இடைத்தேர்தல் நடந்தபோது சாத்தான்குளம் இனி தேவன் குளம் ஆக மாறும் என கூறி வாக்கு சேகரித்தார்கள். ஆனால், அதன்பிறகு அந்த ஊர் மிகவும் மோசமான நிலைக்குத்தான் சென்றதே தவிர முன்னேறவில்லை. இதேநிலை ஸ்ரீரங்கத்துக்கும் ஏற்படலாம்.

இங்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வெற்றி பெறுவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. பாஜக வெற்றி பெற்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் அளித்த பெருமை தொகுதி மக்களைச் சேரும். பாஜகவுக்கு வெற்றி கிடைத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசுக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

பிரச்சாரத்துக்கு ஹை-டெக் வாகனம்

பாஜகவினரின் தேர்தல் பிரச்சா ரத்துக்காக ஆந்திராவிலிருந்து ஹை-டெக் பிரச்சார வாகனம் திருச்சி வந்துள்ளது.

இந்த வாகனத்தில் குளிரூட்டப்பட்ட அறையுடன் கூடிய கேபின், பிரம்மாண்ட எல்இடி திரையுடன் கூடிய டிஜிட்டல் டிவி, ஹைட்ராலிக் மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக சாட்டிலைட் ரிசீவர் என பல நவீன அம்சங்கள் உள்ளன. இதன்மூலம் ஸ்ரீரங்கத்தின் முக்கிய இடங்களில், மக்கள் மத்தியில் பாஜக அரசின் சாதனைகளை ஒளிபரப்பி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x