Last Updated : 03 Feb, 2015 10:22 AM

Published : 03 Feb 2015 10:22 AM
Last Updated : 03 Feb 2015 10:22 AM

2015-ல் வங்கித் துறை எப்படி இருக்கும்?

கைபேசி மூலம் அளிக்கப்படும் வங்கிச் சேவை இந்த ஆண்டிலிருந்து அதிகரிக்கும்.

ஒவ்வொரு புது வருடம் பிறக்கும்போதும் வங்கித் துறை எப்படி இருக்கும் என்று பலரும் ஆருடம் சொல்லக் கிளம்பிவிடுவது மேற்கில் வாடிக்கை. ஐ.பி.எம். போன்ற பெரிய கணிப்பொறி நிறுவனங்களுக்கும் பல வங்கிகளுக்கும் மென்பொருள் சேவை அளிக்கும் ‘கேப் ஜெமினி’ போன்ற நிறுவனங்களும், ‘கார்ட்னர்’ போன்ற ஆய்வு அமைப்புகளும் 2015-ம் ஆண்டுக்கான விரிவான வங்கிப் பலன்களை வழங்கியிருக்கின்றன.

இவர்கள் எல்லோரும் அழுத்தம்திருத்தமாகச் சொல்வது இது: புது வருஷத்தில் கைபேசி மூலம் அளிக்கப்படும் வங்கிச் சேவை அதிகரிக்கும். கணக்கிலிருந்து பணம் செலுத்த, பெற, முதலீடு செய்ய, பங்குச் சந்தையில் வாங்க, விற்க, இப்படிப் பலதரப்பட்ட பணிகளை வங்கியின் வாசல் படியை மிதிக்காமல் கைபேசியில் சில நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம்.

எட்டு லட்சுமியும் ஏறிவர…

2015-ல் எட்டு லட்சுமியும் ஏறிவர கைபேசி மூலம் இன்னொரு யோகமும் அடிக்கப்போகிறது என்று தெரிகிறது. உங்கள் பெயரில் யாராவது காசோலை தருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை வங்கிக்குப் போய் உங்கள் கணக்கில் செலுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் காசோலையை அளித்தவரின் வங்கிக்கு அனுப்பி, அவர் கணக்கிலிருந்து பணம் பெற்று உங்கள் கணக்கில் வரவாகும். ஆனால், வங்கிக்குப் போகாமல், உங்கள் கைபேசியில் பொருத்திக்கொள்ளக் கூடிய சிறிய ஒளி வருடியால் (ஸ்கேனர்) அந்த காசோலையை ஸ்கேன் செய்து, படத்தைக் கைபேசி மூலம் உங்கள் வங்கிக்கு அனுப்பலாம். காசோலை கிளியரிங்கில் போகாமல் படம் பயணப்பட்டு, கணக்கில் பணம் வரவாகிவிடும். ‘ரிமோட் டெபாசிட்’ எனப்படும் இந்தச் செயல்பாடு, 2015-ல் பெருகித் தழைக்குமாம்.

இந்தியாவில் கைபேசிச் சேவை வெற்றியடைய வேண்டுமானால், கைபேசித் திரையில் அதற்கான தமிழ் மற்றும் மாநில மொழிகள் ஒளிர வேண்டும். இதைச் செய்ய மென்பொருள் உருவாக்கித் தரப்படுத்தப்படவும் வேண்டும். வங்கிகள் இன்னும் இந்தப் பாதையில் பெருமளவு முன்னேறிச் செல்லாததற்கு ஒரு காரணம், இதற்கான செலவு கணிசமாக இருக்கும் என்பதுதான்.

ஊடக ஒருங்கிணைப்பு

வங்கிக் கிளை, கைபேசி, இணையம், ஏடிஎம் என்ற ஊடகங்கள் மூலம் வங்கியில் வரவு - செலவு செய்கிறோம் இல்லையா? அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் (சேனல் இன்டெக்ரேஷன்) உலகெங்கிலும் நிகழும் என்று இன்னொரு புத்தாண்டுப் பலன் சொல்கிறது.

உங்கள் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கைபேசி மூலம் வங்கிக்குக் கோரிக்கை விடுத்து, இணையம் மூலம் அதற்கான பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிலிருந்து மாற்றி, வங்கிக் கிளையில் அந்தக் கோரிக்கையைத் திருத்தியமைத்து, தேசிய சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்ய வழியமைத்துக் கொடுப்பது போன்ற பணிகள் ஊடக ஒருங்கிணைப்பு மூலம் சாத்தியமாகும்.

எல்லாக் கணிப்பும் நல்ல காலம் வருது பாணியில் இல்லை. 2015-ல் உலகெங்கிலும் வங்கி மென்பொருள் அமைப்புகளை இணையம் மூலம் திருட்டுத்தனமாக ஊடுருவி (ஹேக் செய்து) கணக்குகளில் இருப்பாக உள்ள தொகையை விழுங்குவது அதிகமாகும் என்ற ஆருடம் இதற்கு உதாரணம். இம்மாதிரி இணைய மோசடிகள் சீனாவில் பெருமளவில் அரங்கேற வாய்ப் பிருக்கிறதாம். அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, மலேசியா, வியட்னாம் ஆகிய நாட்டு வங்கிகளின் கணிப்பொறி அமைப்புகள் முக்கியமாகப் பாதிக்கப் படலாம்.

காதில் பூ சுற்றுவதாகத் தோன்றும் இன்னொரு கணிப்பைக் கவனிக்கும் முன், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்ததைச் சொல்லியாக வேண்டும். அந்த நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகளில் ஒன்றான வெஸ்ட்பேக் (Westpac) 900 பேரைப் புதிதாக எடுத்திருக்கிறது. எல்லோரும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். வேறு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு வங்கிப் பயிற்சி அளித்து, வேலைக்கு அமர்த்தியிருக்கிறது வெஸ்ட்பேக் வங்கி. “வயதான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு, இளைய தலைமுறை ஊழியர்கள் பொறுமையோடும் பொறுப்போடும் சேவை அளிப்பதில்லை. இந்த வயதான ஊழியர்கள் அந்தக் குறையை நிவர்த்திசெய்கிறார்கள்” என்கிறது வங்கி. இம்மாதிரி, வாடிக்கையாளர் நலனைக் கருத்தில் கொண்டு புரட்சிகரமான ஊழியர் சேர்ப்பு நடவடிக் கைகள் 2015-ல் அதிகமாகலாமாம்.

டம்ளர், சினிமா டிக்கெட், மதுரைக்கு டிக்கெட்

வாடிக்கையாளர்கள் தொடர்பான மற்றொரு கணிப்பு இப்படிப் போகிறது - விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், பேரங்காடிகள் போல, வங்கி வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையைப் பொறுத்து, பாய்ன்ட்டுகள் அளிக்கப்படும். சேமிப்புக் கணக்கில் பணம் எடுத்தால் 150 பாய்ன்ட், நிரந்தர வைப்பில் பணம் போட்டால் 300 பாய்ன்ட், வீட்டுக் கடன் வாங்கினால் 300 பாய்ன்ட் என்றெல்லாம் பாய்ன்ட்டுகள் அளிக்கப்படும். இவையெல்லாம் விசுவாசக் குறியீடுகள் (லாயல்டி பாய்ன்ட்ஸ்). 400 பாய்ன்ட்டுகளைச் சேர்த்த வாடிக்கையாளருக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர், 600 பாய்ன்ட் சேர்த்தால் சினிமா டிக்கெட், 30,000 பாய்ன்ட்டுக்கு மதுரைக்குப் போக விமான டிக்கெட் - இப்படி இலவசப் பரிசு வழங்கும் திட்டங்கள் உலகமெங்கும் அட்டகாசமாக வெற்றி பெறுமாம். அரசியலிலிருந்து வங்கி வரை இலவசமே வெல்லும் எனச் சொல்லாமல் சொல்லும் ஆருடம் இது.

நிழற்பட ஏடிஎம்-கள் (image ATM) உபயோகம் பரவலாகும் என்பது 2015-க்கான இன்னொரு ஆருடம். இந்த வகை ஏடிஎம்கள் செய்வது பணம் வழங்குவது மட்டுமில்லை. வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் செலுத்த முயலும் பணம், வேறு வங்கியில் பணம் பெற்று வரவு வைக்க வேண்டிய காசோலைகள் இவற்றையும் ஏடிஎம்மிலேயே செலுத்திவிடலாம். காசோலை தனியாக, பணம் தனியாக என்று பிரித்து, எல்லாவற்றையும் புகைப்படமும் எடுத்து, விவரங் களோடு ரசீது கொடுத்துவிடும் நிழற்பட ஏடிஎம்.

இந்தியாவில் நிழற்பட ஏடிஎம்கள் வருவது இருக்கட்டும், அடிப்படை ஏடிஎம் சேவையே பிரச்சினை யாகி இருக்கிறதே, அதைச் சீர்செய்ய வேண்டாமா? தேசிய அளவில் பல வங்கிகளின் ஏடிஎம்களும் ஒருங்கிணைக்கப்பட்டுத் திறமையாகச் செயல்புரியும் பிரம்மாண்டமான ஏடிஎம் நெட்வொர்க் நம் நாட்டில் உண்டு. ஆனால், மாதத்துக்கு மூன்று முறைக்கு மேல் ஏடிஎம்மைப் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் பேங்கின் உத்தரவைச் சொல்லி, நம் நாட்டு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் பணம் கறக்கின்றன. வங்கிக் கிளைக்கு வாடிக்கையாளர்கள் வந்து பணம் போட, எடுக்க இருந்தால், அவர்களுக்குச் சேவை அளிப்பதற்காக அதிக ஊழியர்கள், இடம், மின்சாரம் என்று செலவு அதிகமாகும். ஏடிஎம் நிறுவினால் அந்தச் செலவுகள் கணிசமாகக் குறைந்துவிடும். இதுதான் உண்மை. ஆனால், ஏடிஎம் பயன்படுத்துவதற்குக் கட்டுப் பாடு வைத்து வங்கியில் கூட்டத்தைப் பெருக்கினால் செலவு ஏறத்தானே செய்யும்? இதற்குப் பதில் இல்லை.

- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: eramursukan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x