Published : 08 Feb 2015 11:00 AM
Last Updated : 08 Feb 2015 11:00 AM

ஹோட்டல்கள் முன்பு நடனமாடவிட்டு வரி வசூலிப்பதா? - சென்னை மாநகராட்சிக்கு திருநங்கைகள் கடும் கண்டனம்

வரி செலுத்தாத நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு திருநங்கை களை நடனமாட வைத்து வரி வசூலித்த சென்னை மாநகராட்சி யின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

குழந்தை பிறந்தாலோ, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி பெறுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. அதேநேரத்தில், அவர் களிடம் சாபம் பெறுவதை பெரிய பாவமாக கருதுகின்றனர். இன்னொரு பக்கம், பொது இடங்களில் திருநங்கைகளை கேலி செய்வதும், பாலியல் துன்புறுத்தல் களுக்கு ஆளாக்குவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போதெல்லாம் சினிமாவில் தங்களை விமர்சித்து காட்சிகள் அமைத்தாலோ, வசனம் இடம் பெற்றாலோகூட திருநங்கைகள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், சொத்து வரி செலுத்தாத நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூல் செய்திருக்கிறது சென்னை மாநகராட்சி. இது திருநங்கைகளை அவமதிக்கும் செயல் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் சார்பாக சொத்து வரி வசூல் நடந்தது. வரி செலுத்தாத நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட விட்டு பணத்தை வசூலித்துள்ளனர்.

மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு திருநங்கை களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இதுபற்றி தமிழகத்தின் முதல் பொறியியல் திருநங்கை மாணவியான பானு கூறும்போது, “பொதுமக்களிடம் தற்போதுதான் திருநங்கைகள் குறித்த தவறான எண்ணம் மாறி வருகிறது. இந்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை திருநங்கைகளை இழிவுபடுத்து வதுடன், பொதுமக்களிடம் அவர் களைப் பற்றிய தவறான எண்ணங் களை பரப்புவதாக உள்ளது. திருநங்கைகளுக்கு முறையாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தராமல், இவ்வாறு கேலிப் பொரு ளாக நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்’’ என்றார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாரதி கண்ணம்மா:

திருநங்கைகளை பயன்படுத்தி சமூகத்துக்கு பயனுள்ள ஒரு விஷயத்தைத்தான் செய்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் திருநங்கைகளை கேலிப் பொருளாக மட்டும் பயன்படுத்திவிட்டு ஒதுக்குவதை கண்டிக்க வேண்டும். வாய்ப் பிருக்கும் இடங்களில் திருநங்கை களை வரி வசூலிக்கும் அதிகாரி களாக நியமிக்கலாம்.

அரங்க கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா:

திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூலிப்பது, அவர்களை திருஷ்டி பொம்மைகளாக, அவமானச் சின்னங்களாக பயன்படுத்துவது போன்றதாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருநங்கை களுக்கு முறையான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தராமல், இதுபோன்ற வேலைகளை அளிப்பது தவறு. இந்த நடவடிக்கை யில் ஈடுபட்ட அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, ‘‘மண்டலங்களில் வித்தியாசமான புதிய முறைகளை கையாண்டு வரி வசூலிக்க அறிவுறுத்தி இருந்தோம். ஆனால், திருநங்கைகளை பயன்படுத்த வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மண்டலத்தில் முடிவு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இதை நாளிதழ்களில் படித்துதான் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து விசாரிக்கிறேன். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சட்டவிதிகளை மீறாமல், ஆபாசமாக இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x