Published : 10 Feb 2014 02:40 PM
Last Updated : 10 Feb 2014 02:40 PM

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ் உறுதி

மக்களவைத் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாமக சார்பில் 2014 - 2015 ஆம் நிதியாண்டிற்கான நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமிழகத்தில் மதுவால் விபத்துகள் அதிகரித்துள்ளது. கணவரை இழுந்து பெண்கள் அதிக அளவில் உள்ளனர். முன்பெல்லாம் 30 வயதில் தான் மது குடிப்பார்கள். ஆனால், தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் 13-வது சிறுவனும் மது குடிக்கிறான்.

பல இடங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும். மதுவை ஒழிப்பதாக சொல்லும் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என பெண்களிடம் பிரசாரம் செய்கிறோம். அதே போல மோனோ ரயில் திட்டத்தை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதற்கான மாற்றுத் திட்டங்களை, நாங்கள் வைத்துள்ளோம். நாங்கள் சமூக ஜனநாயக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவித்துவிட்டோம். 10 தொகுதிகளில் தேர்தல் வேலைகள் நடந்து வருகிறது. கூட்டணி அமைந்தாலும் இந்தத் தொகுதிகளை விட்டுத் தரமாட்டோம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி எந்தக் காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம்" என்றார் ராமதாஸ்.

அதேவேளையில், பாஜகவுடன் நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்த்தை, பாஜக, தேமுதிக கூட்டணியில் பாமக இடம்பெறுமா?, தேமுதிகவையும் விஜயகாந்தையும் விமர்சித்த நீங்கள், அவருடன் கூட்டணி செல்லத் தயாரா? இதுவரை நீங்கள் விமர்சித்து வந்த விஜயகாந்த் உடன் கூட்டணிக்குச் செல்லத் தயாரா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ராமதாஸ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, ராமதாஸ் வெளியிட்ட >பாமகவின் நிழல் பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் மே 1 உழைப்பாளர் நாள் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்; பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x