Published : 05 Jan 2015 11:00 AM
Last Updated : 05 Jan 2015 11:00 AM

இறுதிப் பட்டியல் வெளியீடு: தமிழக வாக்காளர் 5.62 கோடி பேர்- 2.87 லட்சம் பேர் நீக்கம்; 16.23 லட்சம் பேர் சேர்ப்பு

தமிழகத்தில் வாக்காளர்கள் எண் ணிக்கை 5.62 கோடியாக உயர்ந் துள்ளது. இதில், 16.23 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள் ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 67 ஆயிரம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, 2015 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை சிறப்புத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 48 லட்சத்து 70 ஆயிரத்து 296 வாக்காளர்கள் இருந்தனர். ஆண்கள் 2 கோடியே 74 லட்சத்து 20 ஆயிரத்து 556, பெண்கள் 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 615, இதர வாக்காளர்கள் 3,125 பேர் இடம் பெற்றிருந்தனர்.

புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம், மாற்றம் தொடர்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 2 முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. 21 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகின. இவற்றில் புதிதாக பெயர் சேர்க்க 17 லட்சத்து 44 ஆயிரத்து 819, வெளிநாடுகளில் வாழும் வாக்காளர்கள் பெயர் சேர்க்க 225, பெயர் நீக்க 42 ஆயிரத்து 832, பெயர் திருத்தத்துக்காக 2 லட்சத்து 86 ஆயிரத்து 208, முகவரி மாற்றத்துக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் தாக்கலாகின.

இந்நிலையில், திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டார். புதிய பட்டியலின்படி, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 62 லட்சத்து 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 67 ஆயிரத்து 817, பெண்கள் 2 கோடியே 81 லட்சத்து 34 ஆயிரத்து 605 பேர். ஆண்களைவிட 67 ஆயிரத்து 788 பெண்கள் அதிகமாக உள்ளனர். இதர பாலினத்தவர் (திருநங்கையர்) 3,446 பேர்.

சென்னையில் அதிகபட்சமாக 38 லட்சத்து 34 ஆயிரத்து 388 வாக்காளர்களும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக நான்கு லட்சத்து 83 ஆயிரத்து 926 வாக்காளர்களும் உள்ளனர். அரியலூர், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்களில் திருநங்கையர் ஒருவர்கூட பட்டியலில் இடம் பெறவில்லை.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் மொத்தம் 17 லட்சத்து 44 ஆயிரத்து 819 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வுக்குப் பின், 16 லட்சத்து 23 ஆயிரத்து 170 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் பெயர் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

புதிய பட்டியலின்படி, கடந்த முறையைவிட 13 லட்சத்து 35 ஆயிரத்து 572 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். பட்டியலில் பல இடங்களில் இடம்பெற்ற 2 லட்சத்து 87 ஆயிரத்து 598 வாக்காளர்களின் பெயர் நீக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 லட்சம் பேரை சேர்க்க விழிப்புணர்வு

புதிய வாக்காளர் பட்டியலின்படி, 18 முதல் 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 90 ஆயிரத்து 27 ஆக உள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கின்படி, 27 லட்சத்து 34 ஆயிரத்து 388 பேர் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மீதமுள்ள 6 லட்சத்து 44 ஆயிரத்து 361 பேரை பட்டியலில் சேர்க்க அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் எப்போது?

ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை ஜனவரி 5-ம் தேதிக்குப் பிறகு வெளியிடுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். புதுடெல்லிக்கு தேர்தல் அறிவிக்கும்போது, ஸ்ரீரங்கம் தேர்தலுக்கும் அறிவிக்க வாய்ப்புள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x