Published : 29 Jan 2015 09:50 AM
Last Updated : 29 Jan 2015 09:50 AM

பணமோசடி வழக்கு: பாஜக வேட்பாளருக்கு முன்ஜாமீன்

பணமோசடி வழக்கில் ஸ்ரீரங்கம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம், கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் கல்லூரி முதல்வர் என்.கண்ணன், பிராட்டியூர் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி முதல்வர் சீதாராமன், சிறுகனூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் கிறிஸ்துராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விவரம்:

எங்களது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது தொடர்பாக பிரசிசன் இன்போ மெடிக் (எம்) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த வகையில் கல்லூரி நிர்வாகம் டிசம்பர் 2011 வரை ரூ.1,13,91,857 பணம் பாக்கி வைத்திருப்பதாக பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அவர் கூறியது போல் நாங்கள் பாக்கி வைக்கவில்லை. அதை விசாரித்த போலீஸார், புகாரில் உண்மையில்லை எனக்கூறி புகாரை முடித்துவிட்டனர்.

இந்நிலையில் அதே குற்றச்சாட்டு தொடர்பாக எங்கள் மீது புதிதாக புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் திருச்சி நகர் குற்றப் பிரிவு போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியம் உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, சுப்பிரமணியம் தேர்தல் முடிந்த பிறகும், மற்றவர்கள் நீதிமன்ற உத்தரவு கிடைத்த நாளில் இருந்தும் திருச்சி நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 2 வார காலத்துக்கு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x