Last Updated : 12 Jan, 2015 09:44 AM

 

Published : 12 Jan 2015 09:44 AM
Last Updated : 12 Jan 2015 09:44 AM

எருது விடும் விழா தடை விலக்கப்படுமா?- எதிர்பார்ப்பில் விவசாயிகள்

தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை. தை முதல்நாளில் சூரியன் பொங்கல், அடுத்த நாள் கால்நடைகளை கவுரவிக்கும் மாட்டுப் பொங்கல், மறுநாள் உறவினர்கள் எல்லாம் ஒன்று கூடி மகிழ காணும் பொங்கல் என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் களைகட்டும்.

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு சிறப்பு என்றால் வடமாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எருது விடும் விழா பிரபலமானது. ஜல்லிக்கட்டுக்கு இணையான சிறப்பை பெற்ற இந்த எருது விடும் விழாக்கள் மிகவும் பாதுகாப்பானவை.

100 மீட்டர், 200 மீட்டர் தூரம் என எல்லையை நிர்ணயித்து, அந்த எல்லைக்குள் மாட்டை 3 முறை ஓடவிடுவார்கள். எந்த மாடு பந்தய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கிறதோ அந்த மாட்டுக்கு ரொக்கப் பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். இந்த விளையாட்டில் பார்வையாளர்கள் வெளியில் அமர வைக்கப்படுவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இளைஞர்கள் சிலர் காளைகளை விரட்ட களத்தில் இருப்பார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் கோலாகலமாக நடத்தப்படும்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாவுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் விவசாயிகள், எருதுபிடி வீரர்கள் கவலையடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எருது விடும் விழாவுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் காளைகளை தயார் செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

காளைகளுக்கு ஓட்டப்பயிற்சி அளித்து வருகின்றனர். கால்கள் வலுவாக இருப்பதற்காக வாரம் இரு முறை நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள காளைகள் கிருஷ்ணகிரி அணை மற்றும் நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளுக்கு தினசரி உணவாக அதிகாலையில் பாதாம் பருப்பு, கேரட், பேரீச்சம்பழம் உட்பட 16 வகை தானியங்களை உணவாக கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, எருதுவிடும் விழாவில் மாடுகள் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படுவதில்லை. பந்தய தூரத்தில் தனியாக ஓடவிடப்படுகிறது. மொத்த தூரத்தையும் குறிப்பிட்ட சில நொடிகளில் கடந்துவிடுகிறது. மாடுகள் எந்த விதத்திலும் துன்புறத்தப்படுவதில்லை. எனவே எருதுவிடும் விழாக்களுக்கு விதிவிலக்கு அளி்த்து அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x