Published : 19 Apr 2014 08:12 AM
Last Updated : 19 Apr 2014 08:12 AM

2 ஆண்டு சிறை தண்டனை: செல்வகணபதி ராஜினாமா- மாநிலங்களவையில் திமுக பலம் 4-ஆக குறைந்தது

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தனது பதவியில் இருந்து விலகுவதாக மாநிலங்களவை செயலருக்கு வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை சிபிஐ நீதிமன்றம் டி.எம்.செல்வகணபதி தொடர்பான வழக்கில் வியாழக்கிழமை இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செல்வகணபதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக மாநிலங்களவை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி யின் திமுக தேர்தல் பொறுப் பாளராக செயல்பட்டுவரும் நிலையில் வெள்ளிக்கிழமை இந்த தகவலை தருமபுரியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றம் கூடி முடிவெடுத்து என்னை பதவி விலகும்படி சொல்ல சுமார் 2 மாதங்கள் ஆகலாம். ஆனால், சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பவன் என்ற முறையில் தீர்ப்பு வந்த நிலையில் உடனடியாக எனது பதவியில் இருந்து விலக விரும்பி நாடாளுமன்ற மாநிலங்களவை செயலருக்கு என் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளேன். சிலரைப் போல் தண்டனைக்குப் பிறகும் பதவிகளில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை.

1996-ம் ஆண்டு, அன்றைய அரசின் உயர்மட்டக் குழுவின் தலைவரும், அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில் கூடி சுடுகாடுகளில் கூரை அமைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுத்தது. துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் திட்டத்துக்கு கையெழுத்து மட்டுமே போட்டேன். நாகை மாவட்டத்தில் கூரை அமைத்ததில் அரசுக்கு 23 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. வழக்கு வரும் வரை இதுதொடர்பாக ஒரு புகார்கூட வரவில்லை. எனவே அரசியல் காழ்ப்பு காரணமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது. இதுபோன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் தொடர்ந்தால் நாட்டில் எந்த அமைச்சரும், அதிகாரியும் செயல்படவே முடியாது. என் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றமற்றவன் என்று நிரூபித்த நான் இதிலும் குற்றமற்றவன் என நிரூபிப்பேன். இவ்வாறு செல்வகணபதி கூறினார்.

திமுக பலம் குறைந்தது

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக குறைந்துள்ளது. தற்போது கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோர் மட்டுமே எம்.பி.க்களாக உள்ளனர்.

ஊழல் ஒழிப்புக்கு பலனில்லை: உமாசங்கர்

சுடுகாட்டுக் கூரை ஊழலை 95-ம் ஆண்டு முதல் முறையாக வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர். தற்போது ஒழுங்கு நடவடிக்கை துறை கமிஷனராக உள்ள அவர் இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது:

சட்டம் கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டு தன் வேலையைச் செய்துள்ளது. இந்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிக்கு வாழ்த்துகள். ஊழலை ஒழிக்க நான் எடுத்த முயற்சிக்கு 20 ஆண்டுகளில் பலன் கிடைத்துள்ளதா என்றால் இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x