Published : 13 Dec 2014 10:29 AM
Last Updated : 13 Dec 2014 10:29 AM

பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் 15,000 பேருக்கு வேலை அளிக்க இலக்கு: ரூ.58.40 கோடி மானியம் வழங்க திட்டம்

பாரத பிரதமர் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் மூலம் தமிழகத்தில் 2014-15 ஆண்டில் 15 ஆயிரத்து 168 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் நேற்று பாரத பிரதமர் வேலை வாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் குறித்த பயிலரங்கம் நடை பெற்றது.

இந்த பயிலரங்கத்தை மாநில குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலர் குமார் ஜெயந்த் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் டி.தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிலரங்கத்தில் ஆணையத் தின் தலைவர் டி. தனபால் பேசியதாவது: தமிழகத்தில் பாரத பிரதமர் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் மூலம் இதுவரை 21,672 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் மூலம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு மொத்தம் 321.39 கோடி நிதி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 2,910 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 52 கோடி மானியம் வழங்கப் பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 2014-15 ஆண்டில் 15 ஆயிரத்து 168 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மொத்தம் 58.40 கோடி மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் செயலர் குமார் ஜெயந்த் பேசும்போது,”தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக தொழில் முனைவோர்களை அதிகமாக உருவாக்க முடியும். பொதுத்துறை, தனியார் மற்றும் கிராம வங்கிகள் தொழில்முனைவோர்களுக்கு கடன் உதவி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்”என்றார்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் சென்றோ மற்றும் மாநில கதர் கிராம தொழில் ஆணைய தொலைபேசி எண் 044 - 28351019 தொடர்பு கொண்டோ திட்டம் பற்றி அறிய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x