Published : 18 Dec 2014 10:13 AM
Last Updated : 18 Dec 2014 10:13 AM

சாதாரண ரகத்துக்கு ரூ.50, சன்ன ரகத்துக்கு ரூ.70: நெல் கொள்முதல் விலை உயர்வு - உணவுத் துறை அமைச்சர் அறிவிப்பு

அறுவடை காலம் நெருங்குவதால் நெல் கொள்முதல் நிலையங்களை தயார் நிலையில் வைக்கவும், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.50 மற்றும் ரூ.70 உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்களுடனான மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

சம்பா பருவ நெல் அறுவடை வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கவும், மின்னணு எடை மேடைகள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் தளவாட சாமான்களை இம்மாத இறுதிக்குள் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லவும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு கள் தவிர, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இக் கொள்முதல் பருவத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சாதாரண ரக நெல் ரூ.50 உயர்த்தி ரூ.1,410-க்கும், சன்னரக நெல் ரூ.70 உயர்த்தி ரூ.1,470-க்கும் கொள்முதல் செய்யப்படும். 1.10.2014 முதல் 30.9.2015 வரை கொள்முதல் செய்யப்படும் அனைத்து ரக நெல்லுக்கும் இந்த கொள்முதல் விலை பொருந்தும்.

இதுவரை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4,700 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சந்தை உபரி முழுவதையும் கொள்முதல் செய் வதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு உணவுத்துறை முதன்மைச் செயலாளர் முகம்மது நசீமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x