Published : 29 Dec 2014 11:15 AM
Last Updated : 29 Dec 2014 11:15 AM

நகரவாசிகளின் பொங்கல் தேவைக்காக மானாமதுரையில் தயாராகும் டிஸ்கோ அடுப்புகள்

பொங்கல் திருநாளன்று நகரவாசிகளும், பாரம்பரியமான முறையில் பொங்கலிட்டு கொண்டாட புதுவித டிஸ்கோ மண் அடுப்புகள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தைப்பொங்கல் திருநாளில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருந்த இயற்கைக்கும், காளைக்கும் நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து வழிபடும் முறை தொடர்கிறது.

கிராமப்புறங்களில் விவசாயிகள் பாரம்பரியமாக பொங்கலிட்டு சிறப்பாகக் கொண்டாடுவர். ஆனால், நகர்ப்புறவாசிகள் பெயரளவில் கேஸ் அடுப்பில் சில்வர் பானையில் பொங்கல் வைத்து வழிபடுவர். நகர மக்களும், கிராமப்புறங்கள் போன்று இயற்கையோடு இயைந்து பொங்கல் கொண்டாடும் வகையில் பிரத்தியேக அடுப்புகள் மானாமதுரையில் தயார் செய்யப்படுகின்றன.

மானாமதுரை குலாலர் தெருவில் உள்ள மண்பாண்டக் கைவினைஞர்கள் அடுப்புகள், பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊரைச் சுற்றியுள்ள செய்களத்தூர், நத்தபுரக்கி, வேதியரேந்தல் கண்மாய்களில் உள்ள சவடு மண், களிமண், வைகை ஆற்றுமணல் சேர்த்து தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் தரமானதாகவும், தனி ரகமாகவும் இருப்பதால் வெளி மாவட்டத்தினர் விரும்பி வாங்கிச் செல்வர். குற்றாலம் செங்கோட்டை கண்மாய் மண்ணின் இயற்கைச் சாயம் பூசப்பட்டு சூளையில் வைத்துசுடும்போது சிவந்த நிறத்தில் கண்கவர் அடுப்புகளாக உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற எடுப்பான அடுப்புகளை வாங்கி விற்பதற்கு இப்போதே வியாபாரிகள் மானாமதுரையில் முகாமிட்டுள்ளனர்.

உற்பத்தி பாதிப்பு

செங்கல் சேம்பர், காளவாசல் உரிமையாளர்கள், லாரிகளில் சவடு மண் எடுக்க தாராளம் காட்டும் அதிகாரிகள், மண்பாண்டக் கைவினைஞர்கள் கண்மாய்களில் மண் எடுப்பதற்கு மட்டும் கெடுபிடி காட்டுவதால் உற்பத்தி பாதித்துள்ளது. தொடர் மழை, குளிர் காரணமாகவும் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த நெருக்கடிகளிலும் கடந்த ஆண்டு மட்டும் 25 ஆயிரம் அடுப்புகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளனர். தற்போது 10 ஆயிரம் அடுப்புகளை தயார் செய்து அனுப்புவதே பெரும் சிரமமாக உள்ளது என்கின்றனர்.

இதுகுறித்து மண்பாண்டக் கைவினைஞர் ரமேஷ் கூறுகையில், “கிராம மக்கள் வீட்டுக்கு வெளியே சூரியனை நோக்கி பெரிய அடுப்பில், பானை வைத்து பொங்கல் வைத்துக் கொண்டாடுவர். இட நெருக்கடியில் உள்ள நகர மக்கள் பெரிய அடுப்பில் விறகு வைத்து எரித்து பொங்கல் வைக்க வழியில்லை.

நகர மக்களும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு அடுப்பின் முகப்பில் குறுகிய வழி உள்ளவாறு தயாரிக்கப்படுகிறது. இதனை டிஸ்கோ அடுப்பு என்றும், மெட்ராஸ்அடுப்பு என்றும் அழைப்பர். இது சென்னை போன்ற நகர மக்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. மற்ற அடுப்புகளை விட டிஸ்கோ அடுப்பு விலைக் குறைவு. ஒரு அடுப்பு ரூ. 25-க்கு தயாரித்துக் கொடுக்கிறோம். போக்குவரத்து செலவு, சேதாரத்தை கணக்கிடும் வியாபாரிகள் ஒரு அடுப்பை ரூ. 40 வரை விற்பார்கள். அடுப்பை தயார் செய்து மண்பாண்ட சங்கத்தில் ஒப்படைத்துவிடுவோம்’’ என்றார்.

கண்மாயில் மாட்டுவண்டிகளில் தடையின்றி மண் எடுப்பதற்கு கனிமவளம், வருவாய்த்துறையினர் உரிய அனுமதி வழங்கினால் இன்னும் உற்பத்தியை அதிகரிக்கலாம். மண்பாண்டக் கைவினைஞர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க அரசு முன்வந்தால் தைப் பொங்கல் திருநாள் இன்னும் தித்திக்கும் திருநாளாக இருக்கும் என ஒருமித்தக் குரலில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x