Published : 21 Dec 2014 09:55 AM
Last Updated : 21 Dec 2014 09:55 AM

தி இந்து வாசகர் திருவிழா இன்று காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலை. வளாகத்தில் நடக்கிறது

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு 'வாசகர் திருவிழா', சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இன்று காலை நடைபெறுகிறது.

பாரம்பரியமிக்க 'தி இந்து' குழுமம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி 'தி இந்து' தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது. தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்த ஓராண்டு நிறைவை வாசகர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல நகரங்களில் வாசகர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோயம்புத்தூர், புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 நகரங்களைத் தொடர்ந்து, 13-வது நிகழ்ச்சியாக சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வாசகர் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த விழாக்களில் பிரபல எழுத்தாளர்கள், நீதிபதிகள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகத் தலைவர்கள், திரைத் துறையினர், விவசாயிகள், வணிகர்கள், தொழில் துறையினர், பல்வேறு சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று வாசகர்கள் மத்தியில் உரையாற்றினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது குடும்ப விழாக் களில் கலந்துகொள்வது போன்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் 'தி இந்து' வாசகர்கள் ஏராளமானோர் பங்கேற்று, 'தி இந்து' நாளிதழின் நிறை குறைகள் பற்றி மிகுந்த அக்கறையோடு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில், சென்னை புறநகர் வாசகர்களை சந்திக்கும் விதமாக காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கலையரங்கில் 14-வது வாசகர் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கு கின்றன. இந்த விழாவில் பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, கவிக்கோ அப்துல் ரகுமான், திரைப்பட வசனகர்த்தா கிரேசி மோகன், எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, வழக்கறிஞர் மற்றும் பெண்ணுரிமை செயல்பாட்டாளர் அஜிதா, திரைப்பட இயக்குநர் நலன் குமரசாமி ஆகியோர் உரையாற்றுகின்றனர். தங்களது அன்றாட வாழ்வில் 'தி இந்து' தமிழ் நாளிதழ் ஏற்படுத்தி யுள்ள தாக்கம் பற்றி வாசகர்கள் சிலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து விழா அரங்கத்துக்கு செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x