Published : 06 Jul 2019 07:46 AM
Last Updated : 06 Jul 2019 07:46 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு; வரும் 8-ல் கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் தகவல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு வரும் 8-ம் தேதி தொடங்கும்  என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 7-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

மொத்தம் 68 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை  பரிசீலனை செய்யும் பணி ஒரு வாரம்  நீடித்தது. இதனால், திட்டமிட்டபடி ஜூலை 2-ம் தேதி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, 4-ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த மருத்துவ அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 6-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 8-ம் தேதிநடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 9-ம் தேதி தொடங்குகிறது” என்றார்.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 இடங்கள் உள்ளன. இதில் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு 506 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 2,744 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசுக்கு உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி (ஐஆர்டி) இந்த ஆண்டுமுதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட உள்ளது.

இந்த கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், 30 இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 55 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.

இதேபோல், சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இவைதவிர தனியார் கல்லூரி களில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசுஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்த உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x