Published : 10 Jul 2019 03:23 PM
Last Updated : 10 Jul 2019 03:23 PM

நீட்: 21 மாதங்களாக அதிமுக அரசு மாணவர்களை ஏமாற்றி பச்சை துரோகம் செய்திருக்கிறது- ஸ்டாலின் விமர்சனம்

கடந்த 21 மாதங்களாக நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக மக்களை தமிழக அரசு ஏமாற்றியது என, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (புதன்கிழமை) நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் குறித்து சட்டப்பேரவையில் பேசியதாவது:

"மத்திய அரசின் மூலமாக தமிழக அரசுக்கு வந்திருக்கக்கூடிய கடிதத்தை நான் ஆதாரத்தோடு இன்றைக்கு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன்.

அதில் மசோதாக்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே, 21 மாதங்கள் ஆகிவிட்டன. தமிழக அரசு, 21 மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கின்றது? என்பதை சட்டப்பேரவையில் வைத்திருக்க வேண்டும், இதனை வைத்தால் தான் 6 மாதத்திற்குள் மீண்டும் வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை 201 விதி தெளிவாகச் சொல்கின்றது.

எனவே, அதையும் கோட்டைவிட்டு விட்டார்கள். இப்பொழுதும், இதுகுறித்து நான் கேட்டேன். அதற்கு தெளிவான பதிலை, முறையான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சரும் சொல்லவில்லை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பூசி முழுகுகின்றார். ஏற்கெனவே, சட்டப்பேரவையில் நாங்கள் விவாதித்திருக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துப் பேசினார்களே தவிர, 2 மசோதாக்களும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

கடந்த 21 மாதங்களாக தமிழக மக்களை தமிழக அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விளக்கம் பெறுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து நீங்கள் ஏமாற்றி இருக்கின்றீர்கள்.

இது தமிழக மக்களுக்கு நீட் தேர்வால் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற மாணவர்கள் - நகரப்புற மாணவர்கள் அனைவருக்கும் இந்த அரசு செய்திருக்கக்கூடிய பச்சை துரோகம் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து", என ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தகவல் வந்ததாகவும், நீங்கள் சொல்லியதை நிரூபித்தால் தயார் எனவும் பதிலளித்தார்.

இதையடுத்து கேள்விக்கு முறையான பதிலை அளிக்கவில்லை எனக்கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x