Published : 12 Jul 2019 02:51 PM
Last Updated : 12 Jul 2019 02:51 PM

திட்டமிட்டு வடமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது என, விசிக தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொல்.திருமாவளவன் பேசியதாவது:

"தென்னக ரயில்வேயில் பணிநியமனங்களின் போதும் தொழிற்பழகுநர் பயிற்சி நியமனங்களின் போதும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே 80% வழங்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

அண்மையிலே திருச்சி பொன்மலை பகுதியில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக தேர்வு நடைபெற்றது. அதில் 1765 பேர் தேர்வு செய்யப்பட அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. ரயில்வே தேர்வில் வடஇந்தியாவைச் சார்ந்த 1600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 165 பேர் மட்டுமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஓரவஞ்சனை ஏன் நடக்கிறது என்பதை ரயில்வே துறை அமைச்சர் கவனிக்க வேண்டும், இதுகுறித்து ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக அந்த சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் சிபிஐ விசாரணை கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் அதற்காக ஆர்ஆர்பி நடத்துகிற தேர்விலும் கூட ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் படித்த மாணவர்களை விட பிற மாநிலங்களைச் சார்ந்த தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல் என்பதை அவைத்தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எழுத்துத் தேர்விலும் அங்கே ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன.

திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி. இதை அமைச்சர் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு அங்கே முக்கியத்துவம் தரவேண்டும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக பியூன், ட்ரக் மேன், கேங் மேன், சானிட்டரி வோர்கர் போன்ற வேலைகளில் தான் இந்த முறைகேடுகள் நடக்கின்றன.

சென்னை ரயில் நிலைய அதிகாரிகள் பிற அதிகாரிகளோடு தொடர்பு கொள்கிற போது இந்தியில் தான் பேச வேண்டும் என்கிற சுற்றறிக்கையை பிறப்பித்தார்கள். ஆனால், அந்தந்த பகுதியைச் சார்ந்த அந்த மொழியைச் சார்ந்தவர்களைத் தான் வேலையில் நியமனம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.

அந்த மொழியைச் சார்ந்தவர்களுக்கு வேலை நியமனம் இல்லாத காரணத்தால் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிற காரணத்தால் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை பிராந்திய மொழிகளாக இருக்கக் கூடிய தமிழ் போன்ற மொழிகளும் தெரியவில்லை. இதனால் அவர்கள் வேறு மொழியை பேசக்கூடிய நிலை ஏற்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, சட்டத்தின்படி வேலைவாய்ப்பில், தொழிற்பழகுநர் பயிற்சியில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனங்களை செய்ய வேண்டும்"

இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x