Published : 02 Jul 2019 12:54 PM
Last Updated : 02 Jul 2019 12:54 PM

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: மாநிலங்களவை தேர்தலில் வைகோ வேட்பாளராகப் போட்டியிட தீர்மானம்

மாநிலங்களவை தேர்தலில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராகப் போட்டியிடுவது என, அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுகவின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தாயகத்தில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள்:

இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்த்லில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

தமிழகத்தில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பாராட்டு

வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வைகோவுக்கு பாராட்டு

மாநிலங்களவை தேர்தலில், மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு ஸ்டாலினுக்கு நன்றி

மதிமுக சார்பில் வைகோ வேட்பாளராகப் போட்டியிடுவார்.

எடப்பாடி பழனிசாமி அரசு, மும்மொழிக் கொள்கையை உறுதியாக எதிர்க்க வேண்டும்; தமிழகத்தில் இந்திக்கு இடம் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தல்

காவிரி படுகையைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மத்திய பாஜக அரசு முற்றாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், வரலாறு காணாத மக்கள் கொந்தளிப்பை மத்திய - மாநில அரசுகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை

கூடம்குளத்தில் அணுக் கழிவு சேமித்து வைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மனித குலத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் அணுஉலைகளை கூடங்குளத்தில் நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தல்

'ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தக்கூடாது; தமிழக அரசும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்

இந்திய நீதித்துறை பணி உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தல்

தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதற்கு தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணமாகும். எடப்பாடி பழனிசாமி அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x