Published : 02 Jul 2019 08:16 PM
Last Updated : 02 Jul 2019 08:16 PM

அனைத்து தண்ணீர் லாரிகளுக்கும் பதிவு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் உள்ள வீட்டு உபயோக குடிநீர் இணைப்பை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுக்க கோரி இளையராஜா என்பவரும் சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்க கோரி நாகேஸ்வர ராவ் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, தண்ணீர் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும், பொதுமக்கள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுக்கப்படும் விவரங்களை அரசு தாக்கல் செய்யாததால், அவற்றை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக மூத்த வழக்கறிஞர் எல்.சந்திரகுமாரை நியமித்தும் உத்தரவிட்டனர்.

அவர் கேட்கும் விவரங்களை மூன்று மாவட்ட ஆட்சியர்களும் வழங்க வேண்டுமெனவும், விவரங்களை வழங்க மறுக்க ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சென்னை பெருநகர ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதுதவிர, வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை எடுத்து வழங்குவதற்கு உரிமம் பெற்று லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனைத்து தண்ணீர் லாரிகளும் உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்வது காட்டாயம் என அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x