Last Updated : 05 Jul, 2019 01:27 PM

 

Published : 05 Jul 2019 01:27 PM
Last Updated : 05 Jul 2019 01:27 PM

காவல் துறையினர் பரிசுப்பொருட்கள், வெகுமதி, வரதட்சணை  வாங்கக்கூடாது: டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்றுவது தொடர்பாக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் எஸ்.தென்னரசு. இவர் தனக்குக் கிடைக்க வேண்டிய காவல் ஆய்வாளர் பதவி உயர்வை நிறுத்தி வைத்து மதுரை மாநகர் காவல் ஆணையர்  18.8.2014-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பதவி உயர்வு மற்றும் பணப்பலன் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் இன்று பிறப்பித்த உத்தரவு:

காவல்துறை போன்று சீருடை பணிகளில்  இருப்பவர்கள்  பணியின் போதும், பணியில் இல்லாத போதிலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் அல்ல.

காவல்துறை நடத்தை விதியில் காவல்துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி, பணம் வாங்குவது வரதட்சணை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் பரிசுப்பொருட்கள் என்ற பெயரில் பூங்கொத்து, பழங்கள் மற்றும் பல பொருட்களை பெற முடியாது. ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு பூங்கொத்துகள், பழங்கள் பரிசாக வழங்கப்படுகிறது தொடர்கிறது.

இதனால் காவல்துறை நடத்தை விதிகளை காவல்துறையில் பணியிலிருப்பவர்களுக்கு டிஜிபி நினைவூட்ட வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பூக்கள், பூங்கொத்துகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கக்கடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதனால் காவல்துறையில் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை காப்பாற்றும் வகையில் காவல்துறையில் பணியிலிருப்பவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி, வரதட்சணை வாங்கக்கூடாது என்ற காவல்துறை நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக டிஜிபி 4 வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x