Published : 29 Jun 2019 12:05 PM
Last Updated : 29 Jun 2019 12:05 PM

உதகையில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் தோல்வி?

உதகை நகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாததால், அந்த திட்டம் தோல்வியடைந்து வருகிறது.

சர்வதேச சுற்றுலா நகரமான உதகையில், நாள் ஒன்றுக்கு 30 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்த கழிவுகளை முறையாக அகற்ற திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை நகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.3.9 கோடி ஒதுக்கப்பட்டது.

வீடு வீடாக சென்று தரம் பிரித்த குப்பை சேகரிக்க 10 ஆட்டோக்கள் மற்றும் தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டன.

உதகை நகரப்பகுதியில் அன்றாடம் சேகரமாகும் 30 டன் குப்பை காந்தள் முக்கோணம் பகுதியில், மேலாண்மை செய்யப்பட்டு மக்கும் குப்பை உரமாகவும்; மக்காத குப்பை மறுசுழற்சிக்கும் உட்படுத்தப் படுகிறது.

எஞ்சியவை தீட்டுக்கல் குப்பை தளத்தில் கொட்டப்படுகின்றன.

குப்பை கொட்டும் தளத்துக்குள் கடந்த இரு மாதமாக, திடக் கழிவு மேலாண்மை செய்யாமல், குப்பை குவிந்து காணப்படுகின்றன. திடக் கழிவு மேலாண்மைக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் பயனற்று கிடக்கின்றன. இந்த கட்டிடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரிக்கின்றனர்.

இப்பகுதியில், தோடர் கிராமம் உட்பட, 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் மற்றும் பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால், இதன் வழியாக நாள்தோறும் மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

எரிக்கப்படும் கழிவுகளால், காற்று மாசு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், கடமான், காட்டெருமை உட்பட வனவிலங்குகள், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால், உடல் உபாதை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, உதகை நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களின் நலன் கருதி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் காந்தளில் இயங்கும் மையங்களில் தரம் பிரிக்கப்படுகின்றன. தீட்டுக்கல் குப்பை தளம் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அங்கு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால், குப்பையை எரிக்க கூடாது என நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x