Published : 23 Aug 2017 02:58 PM
Last Updated : 23 Aug 2017 02:58 PM

மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய நேரத்தில் முடிவெடுக்காமல் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி: உயர் நீதிமன்றம்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் சரியான முடிவை உரிய நேரத்தில் எடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருத்திகா 12-ம் வகுப்பில் 1184 மதிப்பெண்களுடன் 199.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 21-ம் தேதி கிருத்திகா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பின்படி நீட் மதிப்பெண் அடிப்படையில் இன்று காலை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார்.

தேர்வு எழுதியவர்களில் 5 சதவிகிதம் மட்டுமே சி.பி.எஸ்.இ. மாணவர்கள் என்று சொன்ன நிலையில், மாணவர் சேர்க்கையில் அவர்கள் 50 சதவிகித இடத்தைப் பெறுகிறார்கள் என மாணவி தரப்பு வழக்கறிஞர் நீலகண்டன் தெரிவித்தார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த முடிவை உரிய நேரத்தில் முடிவு எடுக்காமல், மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு தமிழக அரசுதான் காரணம் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த பாடத்திட்டத்தில் எத்தனை மாணவர்களுக்கு இடம்கிடைக்க வாய்ப்புள்ளது என இன்று மதியம் தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x