Last Updated : 15 Aug, 2017 12:29 PM

 

Published : 15 Aug 2017 12:29 PM
Last Updated : 15 Aug 2017 12:29 PM

செல்லக்கிளியே மெல்லப் பேசு: சூழலியல் ஆர்வலருக்கு உதவிய போலீஸார்

குழந்தையைப் போல வளர்த்து, எதிர்பாராதவிதமாக தொலைத்த ஒரு கிளியை சமூக வலைத்தளங்கள் மூலமும், போலீஸார் உதவியுடனும் மீட்டிருக்கிறார் ஒரு சூழலியல் ஆர்வலர்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாதிக்அலி. சூழலியல் ஆர்வலரான இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் வசித்து வருகிறார். பிறந்து 4 மாதமே ஆன ஆப்பிரிக்க சாம்பல் நிறக் கிளி ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த மாதம் 15-ம் தேதி இந்த கிளி திடீரென வழிதவறி வீட்டில் இருந்து பறந்து விட்டது. செல்லமாக வளர்த்த கிளி காணாமல் போனதால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. ஆனால், இவரோ நம்பிக்கையுடன், ‘காணவில்லை’ என்ற அறிவிப்போடு கிளியின் படத்தை சமூகவலைத் தளத்திலும், நாளிதழ் மூலமும் விளம்பரம் செய்தார்.

இறுதியில் இந்த கிளி ஒருவரிடம் இருப்பது வாட்ஸ்அப் மூலம் தெரியவந்தது. அதை மீட்க முடியாத நிலை ஏற்பட்டபோது போலீஸ் உதவியுடன் கிளி மீட்கப்பட்டுள்ளது.

சாதிக் அலி கூறும்போது, ‘இந்தியக் கிளிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. வெளிநாட்டுப் பறவைகள் வளர்க்க வன விலங்கு பாதுகாப்பு சட்டம் தடுக்காது என்பதால், நண்பர் ஒருவர் ஆப்பிரிக்க சாம்பல் கிளியை அன்பளிப்பாக கொடுத்தார். 4 மாதமே ஆன அந்த கிளி, விலை மதிப்புமிக்கது. மனிதனுடன் ஒன்றிப்பழகும். அறிவுத்திறன் அதிகம் இருப்பதால் நன்கு பேசக்கூடியது.

எங்கள் குடும்பத்தில் ஒரு நபராக வளர்ந்து வந்தது. திடீரென ஒருநாள் இரவு, வீட்டிலிருந்து வெளியே வழிதவறிப் போய்விட்டது. அந்த கிளி இல்லாத 25 நாள், துக்கத்தில் சிக்கியது போல வீடு மாறிவிட்டது. இறுதியாக ஈச்சனாரி அருகே ஒருவரது வீட்டில் கிளி இருப்பது வாட்ஸ்அப் மூலம் தெரியவந்தது. ஆனால் மீட்க முடியவில்லை. போத்தனூர் போலீஸார் உதவியுடன், வாட்ஸ்அப் எண் எந்த பகுதியைச் சேர்ந்தது என்பதை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்டறிந்து ஆக.10-ம் தேதி கிளியை மீட்டோம்.

ஒரு குழந்தை நம்மிடம் கிடைத்தால் அக்குழந்தை யாருடையது எனக் கேட்டு ஒப்படைப்பதை போல, செல்லப் பிராணிகளையும் உரியவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஏனென்றால் மனதளவில் ஆதரவில்லாத பலருக்கும் செல்லப்பிராணிகளே குழந்தைகளைப் போல இருக்கின்றன.

ரத்த சொந்தங்களைக் கூட விட்டுச் செல்லும் சமூகத்தில், செல்லப் பிராணிகளையும் சொந்தக் குழந்தைகளாய் பாவிக்கும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x