Published : 29 Aug 2017 12:15 PM
Last Updated : 29 Aug 2017 12:15 PM

ஊருணியை தூர்வாரியபோது 8 சிலைகள் கண்டெடுப்பு

விருதுநகர் அருகே ஊருணியை தூர்வாரியபோது வெண்கலச் சிலை ஒன்றும், காரீயத்தால் செய்யப்பட்ட 7 சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன.

விருதுநகர் - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள செங்குன்றாபுரத்தில் உள்ள அழகாய்ச்சி ஊருணியில், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஊருணியில் மண் அள்ளியபோது சுமார் ஒரு அடி ஆழத்தில் காமாட்சி அம்மன், நாகலிங்கம், சுப்பிரமணியர், பிரம்மா, விஷ்ணு சிலைகளும், முருகன் சிலைகள் இரண்டும், ஆஞ்சநேயர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை வெண்கலத்தாலும், மற்ற சிலைகள் காரீயத்தாலும் செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தும் சுமார் 3 இன்ச் முதல் 5 இன்ச் உயரம் கொண்டவை. இச்சிலைகளை எடுத்து சுத்தப்படுத்தி வருவாய்த் துறையினருக்கும் போலீஸாருக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் செய்யது இப்ராஹிம்ஷாவிடம் சிலைகளை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதையடுத்து, அங்கு வந்த விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், சிலைகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இச்சிலைகள் அனைத்தும் சுமார் 50 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. வேண்டுதலுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ இச்சிலைகள் ஊருணியில் போடப்பட்டிருக்கலாம் என்றார். அதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட 8 சிலைகளையும் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x