Published : 23 Aug 2017 01:59 PM
Last Updated : 23 Aug 2017 01:59 PM

சென்னையில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 8 மாதத்தில் 91 ஆயிரம் வழக்குப் பதிவு

சென்னை போக்குவரத்து காவல்துறையின் அண்ணா நகர் , அம்பத்தூர் , புளியந்தோப்பு பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதத்தில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 91,226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வாகன விபத்தில் தலைக்கவசம் இல்லாமல் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதை ஒட்டி ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து மேற்கு மண்டல போக்குவரத்து காவல்துறை சார்பில் கடந்த ஜனவரி முதல் எட்டு மாதத்தில் 190 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

மேலும் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கையின் பேரில் மேற்கு மண்டலம் அடங்கியுள்ள அண்ணா நகர் , அம்பத்தூர் , புளியந்தோப்பு பகுதிகளில் கடந்த எட்டு மாதங்களில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 91, 226 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 6,378 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து தவறிழைத்த 1,223 வாகன ஓட்டிகளின் லைசென்ஸை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் 581 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களது லைசென்ஸ் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

விபத்தைத் தடுக்க மேலும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடரும் நடவடிக்கையும் தொடரும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்றதொரு நடவடிக்கை சென்னை முழுவதும் தொடரும் எனவும் போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x