Published : 15 Aug 2017 07:09 AM
Last Updated : 15 Aug 2017 07:09 AM

33 ஆண்டுகள் சட்டப் போராட்டம்: தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு மும்முரம் - சாதகமான தகவல் வந்திருப்பதாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

நதி நீர் இணைப்பு,நதிகளை தேசியமயமாக்கும் திட்டம் தொடர்பான தனது 33 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் முதன்முறையாக மத்திய அரசிடம் இருந்து சாதகமான தகவல் வந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

திமுக செய்தித் தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் நீர் வளத்துறையின் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நதி நீர் இணைப்பு குறித்து மத்திய அரசு அக்கறையுடன் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக மத்திய நீர் வளத் துறையின் தலைமை ஆலோசகர் பி.என்.நவலவாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, நதிகள் இணைப்பு திட்டத்துக்காக 13 முறை கூடியிருக்கிறது. கேன் - பத்வா நதி நீர் இணைப்பு, தாமன்கங்கா - பின்ஜால் நதி நீர் இணைப்பு மற்றும் பர் - தபி - நர்மதா நதி நீர் இணைப்பு ஆகிய திட்டங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன. நாட்டின் உள்ளூர் நதிகளை இணைக்கும் விஷயத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அதில், தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். ஆண்டுதோறும் கங்கை, பிரம்மபுத்தராவில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. தமிழக நதிகள் காய்ந்துகிடக்கின்றன. கேரளாவில் சுமார் 84 நதிகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் கடந்த 1983-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன்.

அதில், ‘கங்கை, மகா நதி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்க வேண்டும். கேரளத்தின் அச்சன்கோவில் - பம்பை நீர்ப் படுகையை விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் வைப்பாறுடன் இணைக்க வேண்டும். தவிர கேரளத்தில் சுமார் 84 நதிகளில் உபரியாக ஓடும் தண்ணீரை கிழக்குப் பக்கமாக தமிழகத்துக்கு திருப்பிவிட வேண்டும்’ என்று கோரியிருந்தேன்.

பம்பை - வைப்பாறு திட்டம்

முன்னதாக 1975-ல் பம்பை - வைப்பாறு திட்டத்துக்காக ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. பின்பு மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி ஆட்சியின்போது மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு பம்பை - வைப்பாறு திட்டம் சாத்தியமே என்று ஆய்வுக் குழு அறிக்கை அளித்திருந்தது. இந்த நிலையில்தான் நான் தொடர்ந்த வழக்கில் 1992-ல் உயர் நீதிமன்றம், ‘இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் பரிந்துரை செய்யத்தான் முடியும். அதேநேரத்தில் கேரள மாநிலத்துக்கு நாங்கள் உத்தரவிட முடியாது’ என்று தீர்ப்பு அளித்தது. தொடர்ந்து 1995-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன். அங்கும் எனது மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக 2002-ம் ஆண்டு எனது மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது. கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கபாடியா, பட்நாயக், சுதந்திர குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு, எனது பொது நல வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், “நதிகள் இணைப்புத் திட்டம் நடைமுறையில் அவசியம் செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மேலும் இந்தத் திட்டம் குறித்து ஆராய தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஆனால், அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ரவுத்திடம் சென்று ‘நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன்’ என்று எச்சரித்தேன். தொடர்ந்து குழுக்களை அமைத்தார்கள். ஆனால், செயல்பாடுகள் எதுவும் இல்லை.

பாஜக அரசு அமைந்த பிறகு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்றக் கோரினேன். 33 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு முதல்முறையாக மத்திய நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம், தேசிய நதிகள் இணைப்புக்கு சாதகமாக மேற்கண்ட கடிதத்தை எனக்கு அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் நதிகள் இணைப்பு சாத்தியப்படும் என்ற நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மேலும் விரைவாக இந்தத் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x