Published : 05 Aug 2017 09:48 AM
Last Updated : 05 Aug 2017 09:48 AM

2500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீ்ர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 2500 அரசு மருத்துவர்கள் நியமன நடைமுறைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த சகாயபனிமலர் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 144 பின்னடைவு பணியிடங்கள் உட்பட 1223 அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 10.11.2016-ல் அறிவிப்பு வெளியிட்டது.

எழுத்துத் தேர்வு

இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 12.2.2017-ல் நடைபெற்றது. இந்த தேர்வின் அடிப்படையில் 28.02.17 முதல் 15.03 2017 வரை சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த அரசு மருத்துவர் பணித் தேர்வு தொடர்பாக அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், முந்தைய அறிவிப்பை அடிப்படையாக வைத்து 05.07.2017 முதல் 18.07.2017 வரை 2500 அரசு மருத்துவர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைகளை பின்பற்றவில்லை

புதிதாக நியமனம் மேற்கொள்வதாக இருந்தால், அது தொடர்பாக புதிதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்தடுத்து நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றால் பலர் பாதிக்கப்படுவர்.

எனவே முறையாக அறிவிப்பு வெளியிட்டு எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி அரசு மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும். 10.11.2016-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் 2500 அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு தடை விதித்தும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு அரசு மருத்துவர்கள் நியமனம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவர்கள் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தடையை நீக்க மனுதாரர் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x