Published : 22 Aug 2017 09:09 AM
Last Updated : 22 Aug 2017 09:09 AM

அமித்ஷாவின் தமிழக வருகை 2-வது முறையாக தள்ளிவைப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை 2-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 95 நாள் சுற்றுப் பயணத்தை கடந்த மே மாதம் அமித்ஷா தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக வரும் 10, 11 தேதிகளில் சென்னை, 12-ம் தேதி கோவை ஆகிய இடங்களுக்கு வருவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பயணம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 22, 23, 24 தேதிகளில் சென்னை, கோவைக்கு அமித்ஷா பயணம் செய்ய இருப்பதாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு, கட்சி நிர்வாகிகள் கூட்டம், தொண்டரின் வீட்டில் கிளை கமிட்டி கூட்டம், மீனவரின் வீட்டில் உணவருந்துதல், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அமித்ஷாவை வரவேற்று சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜகவினர் டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகளை வைத்திருந்தனர். இந்நிலையில் அமித்ஷாவின் வருகை கடைசிநேரத்தில் 2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் உள்ளிட்ட முக்கியமான பல நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டதால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான சிறப்பான ஏற்பாடுகளை செய்து ஆவலுடன் காத்திருந்த தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமித்ஷா விரைவில் தமிழகம் வருவார். அப்போது இதைவிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். விரைவில் அவரது வருகை பற்றிய தேதி அறிவிக்கப்படும்’’ என கூறியுள்ளார்.

காரணம் என்ன?

அமித்ஷாவின் தமிழக பயணத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு அதிமுக அணிகள் இணைந்து தமிழகத்தில் சுமூகமான அரசியல் சூழல் ஏற்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இணைப்பு தாமதமாகி நேற்றுதான் சாத்தியமானது. அதிமுக அணிகள் இணைந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் பயணம் செய்வது சிறப்பாக இருக்காது என்பதாலேயே அமித்ஷா தனது பயணத்தை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஜக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதைத் தடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தும் பணியில் மோடியும், அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணியில் இணைய உள்ளது. அதுபோல அதிமுகவை ஒன்றிணைத்து கூட்டணியில் இணைக்கும் திட்டம் உள்ளது. தமிழக வருகையின்போது கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட திட்டமிட்டிருந்தார். அது தற்போது நடக்க வாய்ப்பில்லை என்பதால் அவர் தனது பயணத்தை தள்ளி வைத்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x