Published : 01 Jul 2017 03:47 PM
Last Updated : 01 Jul 2017 03:47 PM

அமலுக்கு வந்துள்ளது உண்மையான ஜிஎஸ்டி அல்ல: ப.சிதம்பரம் விமர்சனம்

இந்தியாவில் நேற்று முதல் அமலுக்கு வந் துள்ளது உண்மையான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அல்ல. உண்மையான, குறைபாடுகள் இல்லாத ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. மதிப்புக்கூட்டு வரியை 2005-06-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல் செய்தது. நாடு முழுவதும் அந்த வரி முறை அமலுக்கு வந்து ஏறத்தாழ 12 ஆண்டு கள் ஆகிவிட்டன. அந்த வரி முறையை வெற்றி கரமாக அமல்படுத்திய பிறகு அடுத்தகட்டமாக ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்ய வேண்டும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் 28.2.2006-ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினோம்.

2010-ம் ஆண்டுக்குள் அமல் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதன் தொடர்ச்சியாக மாநில அரசின் நிதி அமைச்சர்கள் குழு, நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த முயற்சியில் 2008-ம் ஆண்டுவரை ஈடுபட் டேன். என்னைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் மேற்பார்வையின்கீழ் முயற்சி நடை பெற்றது. மீண்டும் நான் 2012-ல் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அந்த முயற்சி தொடர்ந்தது. 2005 முதல் 2012-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன.

பாஜக முட்டுக்கட்டை

நிபுணர்கள் குழு அறிக்கை, மாநில நிதி அமைச்சர்களின் குழு அறிக்கை, ஜிஎஸ்டி என்ற அமைப்பு என ஏறத்தாழ அனைத்தும் முற்றுபெற்ற நிலையில் அரசியல் சாசன திருத்தச் சட்டத்தையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. அதற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டது. அப்போ தைய பாஜக ஆட்சியில் இருந்த குஜராத், மத்தியபிரதேச அரசுகள் கடுமையாக எதிர்த் தன. தமிழக அரசும் முட்டுக்கட்டையில் சேர்ந்து கொண்டது. எனவே பெரு முயற்சி எடுத்தும் அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. மேற்கொண்டு ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு கொண்டுவரமுடியவில்லை.

இதனிடையே 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிறைவேற்ற வேண்டும் என்றால் இரண்டு அவைகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். பாஜகவின் அணுகுமுறையை நாங்களும் கடைபிடித்திருந்தால் அரசியல் சாசன திருத்த சட்டம் நிறைவேறியிருக்கும். மக்களவையில் வேண்டுமானால் நிறை வேற்றியிருக்கலாம். ஆனால் மாநிலங்கள வையில் நிறைவேறியிருக்காது.

உண்மையான ஜிஎஸ்டி, நிபுணர்கள் வடி வமைத்துக் கொடுத்ததுதான். ஜிஎஸ்டி-யால் நாட்டுக்கு நல்லது வரவேண்டும் என அன் றும், இன்றும் நம்புகிறோம். இதற்காக இரு அவைகளிலும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம். ஜிஎஸ்டி, வரி முறையின் முன்னோடி. இதை முன்மொழிந்தது ஐமு கூட்டணியின் காங்கிரஸ் அரசு.

ஜிஎஸ்டிக்கு காங். ஆதரவு

ஜிஎஸ்டிக்கு விரோதிபோல காங்கிரஸ் கட்சியை சித்தரிப்பதை வன்மையாக கண்டிக் கிறேன். ஜிஎஸ்டிக்கு முதல் விரோதி பாஜக ஆட்சி. ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களது நிலையை மாற்றிக்கொண்டது தனிக்கதை. ஆனால் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தார்கள் என்பது உண்மை. தொடக்கம் முதலே முன்மொழிந்தது காங்கிரஸ் கட்சி.

நிர்மாணம் செய்யப்போவது யார்?

பெரிய குறைபாடு யார் அந்த வரியை நிர்மாணம் செய்யப்போகிறார்கள் என்ப தாகும். மாநில அரசா, மத்திய அரசா? ஒரு வியாபாரி, தொழில் முனைவோருக்கு எந்த அரசு, எந்த வரியை விதிக்கவேண்டும் என்பது தெளிவாக இல்லை.

இவர்கள் ஏற்பாட்டில் வந்துள்ள ஜிஎஸ்டி யில் இரு அரசுகளும் இந்த வரியை நிர்ணயம் செய்யப்போகிறார்கள். இதில் உள்ள நெளிவு சுளிவுகளை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒன்றரை கோடி வரவு செலவு இருந்தால் இரண்டாக பிரிப்பார்கள். 90 சதவீத வியாபாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள், 10 சதவீத வியாபாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவார்கள்.

ஒன்றரை கோடிக்கு மேல் இருந்தால் 50 சதவீதம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும், 50 சதவீதம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இருப்பார்கள். ரூ.2 கோடிக்குமேல் வரவு செலவு செய்பவர்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வருவார்கள் எனத் தெரியாது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்களா எனத் தெரியவில்லை.

ஒரு மாநில அரசில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு மாநில அரசு மேற்பார்வை செய்யும். ஏழு மாநிலத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஏழு மாநில அரசும் மேற்பார்வை செய்யுமா? ஒரு மாநிலத்தில் தொழில் செய்வோருக்கு மாதத்துக்கு 3 ரிட்டர்ன் செய்யவேண்டும், ஆண்டுக்கு 36 ரிட்டர்ன் தாக்கல் செய்யவேண்டும். ஏழு மாநிலத்தில் தொழில் செய்பவருக்கு ரிட்டன் பைல் செய்வதற்கே ஒருவரை நியமனம் செய்யும் நிலை இருக்கிறது. எந்த அரசு எந்த வியாபாரிக்கு மேற்பார்வை அரசு என்பதை தீர்மானிக்க முடியாமல் சமரசம் என்னும் பெயரில் ஒரு விசித்திரமான ஏற்பாட்டை செய்துள்ளது. இதன் விளைவு போகப்போகத்தான் தெரியும்.

முக்கியமான குறைபாடு

இன்னொரு முக்கியமான குறைபாடு பல பொருட்கள் ஜிஎஸ்டிக்குள் வரவில்லை. பெட் ரோலியப் பொருட்கள், மின்சாரம், ஆல்க ஹால் தயாரிப்புகள், ரியல் எஸ்டேட் (கொஞ் சம் இருக்கு, கொஞ்சம் இல்லை) வரவில்லை. ஆக, இந்தியப் பொருளாதாரத்தில் பெட்ரோ லியத்தையும், மின்சாரத்தையும் ஒதுக்கிவைத் தால் ஏறத்தாழ 35-லிருந்து 40 சதவீதம் பொருளாதாரம் ஜிஎஸ்டிக்குள் வரவில்லை.

ஒரே நாடு, ஒரே பொருளாதாரம், ஒரே வரின்னு சொல்லிட்டு 40 சதவீத பொருளாதாரம் ஜிஎஸ்டிக்குள் வரவில்லையென்றால் பழைய வரி முறையும், புதிய வரி முறையும் இருப்பதாகத்தான் அர்த்தம். பழைய வரி முறை மாறி, புதிய வரி முறை வந்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய வரியும், புதிய வரியும் இருக்கும்.

பழைய மதிப்புக்கூட்டுவரி, கலால் வரி, சேவை வரியோடு சேர்த்து புதிய ஜிஎஸ்டி வரியும் இருக்கும். அதிக லாபம் ஈட்டக்கூடாது என்பதை ஆய்வுசெய்ய அதை மேற்பார்வை செய்வதற்கு அதிகாரி குழுவை நியமிப்பது என்பது வேடிக்கையான, மோசமான ஷரத்து.

இது சந்தைப் பொருளாதாரத்தை பற்றி அறியாதவர்களின் கூற்று. வரி குறைந்திருக் கலாம். ஆனால் போக்குவரத்து கட்டணம், சம் பளம் அதிகரித்திருக்கலாம். ஒருவரி குறையா தென்றால் மற்ற விலைகள் எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக அர்த்தம் இல்லை. சந்தைப் பொரு ளாதாரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்தான் இதைக் கொண்டுவந்துள்ளார். அதிகாரிகள் கையில் ஆயுதம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என உங்களுக்குத் தெரியும்.

இந்த ஜிஎஸ்டி என்பது உண்மையானது அல்ல. நிபுணர்கள் வடிவமைத்த, எங்களது லட்சிய ஜிஎஸ்டி அல்ல. பல குறைபாடுகளை உடைய ஜிஎஸ்டி. இதன் விளைவு போகப்போகத்தான் தெரியும். முதல் விளைவு கொஞ்சம் பணவீக்கம் கண்டிப்பாக ஏற்படும். யாரும் தடுக்க முடியாது.

திடீரென நேற்று ஞானோதயம் ஏற்பட்டு உரங்கள் மீதான 12 சதவீத வரியை 5 சதவீத மாக குறைத்துள்ளார்கள். இதே போன்று இன்னும் மாற்றியமைக்க வேண்டும்.

உண்மையான ஜிஎஸ்டியை குறைபாடு கள் இல்லாத ஜிஎஸ்டியை அமல் செய்ய வேண்டும். அத்தகைய ஜிஎஸ்டி அமல்படுத்த வில்லை. உண்மையான ஜிஎஸ்டியை எதிர்க்கக்கூடாது. அதில் உள்ள குறைகளை, பிழைகளை திருத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வியாபாரிகளுக்கு பாதிப்பு

‘சிறு குறு, நடுநிலை வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி பெரிய பாதிப்பு, அவர்கள் இன்னும் தயாராகவில்லை. பல லட்சம் வியாபாரிகள் தயாராகவில்லை. அவர்களுக்கு அவகாசம் கொடுக்கவில்லை. பாஜக பிடிவாதமாகத் தடுக்கிறது. வியாபாரிகள் புதிய முறைக்கு பழகவில்லை. 66 லட்சம் வியாபாரிகள் உள்ள மாநிலத்தில் 200 வியாபாரிகளிடம் சோதனை நடத்தி புரிந்துகொண்டதாக அர்த்தம் கற்பிக்கிறார்கள். இன்னும் மக்கள் தயாராகவில்லை. இரண்டு மாதம் பரிசோதனை அடிப்படையில் செய்திருந்தால் அதில் ஏற்படும் குறைபாடுகளை களைய வாய்ப்பிருக்கிறது. ஒரே நாள் இரவில் செயல்படுத்தினால் எப்படி. இது செயல்படுகிறதா, தடைபடுகிறதா, தடங்கல் ஏற்படுகிறதா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

முழுமையாக தயாராகாத அரைகுறை வரிச்சட்டத்தை நள்ளிரவில் பாஜக அமல்படுத்தியிருக்கிறது. இதனை காங்கிரஸ் வரவேற்கவில்லை. முதலில் ஜவுளித்தொழில் வேலைநிறுத்தம் தொடங்கியிருக்கிறது. அதைப்போல் பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பாளர்கள், வைரக்கற்கள் பட்டைதீட்டுபவர்கள் என போராடத் தொடங்கியுள்ளனர். அதைப்போல பல தொழிலாளர்கள் சங்கடங்களை சந்திக்கவுள்ளனர்’ என்றார் ப.சிதம்பரம்.

உண்மையான ஜிஎஸ்டி எது?

‘இன்று அமலுக்கு வந்திருப்பது உண்மையிலேயே ஜிஎஸ்டி அல்ல. ஜிஎஸ்டி என்பது ஒரு வரி, ஒரே வரி. ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்றிருக்கும் சூழ்நிலையில் ஒரே வரி முடியாது. ஒரே வரி ஸ்டாண்டர்டு ரேட் இருக்க வேண்டும். ஸ்டாண்டர்டு பிளஸ், ஸ்டாண்டர்டு மைனஸ் ரேட் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஸ்டாண்டர்டு ரேட் 18 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள். 18 சதவீதம் என்பது மற்ற நாடுகளிலிருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக அதிகம். இந்த அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரே 15 முதல் 15.5 சதவீதம் இருந்தால் போதும் என அறிக்கை தந்திருக்கிறார். நாங்களும் 18 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால், அவர்கள் 18 சதவீதத்தில் ஸ்டாண்டர்டு ரேட்டை நிர்ணயம் செய்துள்ளனர். ஸ்டாண்டர்டு பிளஸ், ஸ்டாண்டர்டு மைனஸ் என மூன்று விகிதங்களோடு நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த வரியில் ஏழெட்டு வரி விகிதங்கள் உள்ளன. 0, .25, 3, 5, 12, 18, 28, 40 சதவீதம் என பல விகிதங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே இது ஜிஎஸ்டி அல்ல. ஜிஎஸ்டிக்கு ரொம்ப தொலைவில் இருக்கிறது’ என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x