Last Updated : 30 Jul, 2017 10:08 AM

 

Published : 30 Jul 2017 10:08 AM
Last Updated : 30 Jul 2017 10:08 AM

தமிழகம் முழுவதும் 2 மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 1,800 பேர் பாதிப்பு: விடுதிகள், குடியிருப்புகளை கண்காணிக்க சிறப்பு குழு - சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு, மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கேரள மாநில எல்லை அருகில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியா குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் 5 ஆயிரத்து 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் டெங்குவால் 1,800 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கடந்த 7 மாதத்தில் கேரள மாநிலத்தில் 12,906 பேரும், கடந்த 2 மாதத்தில் மட்டும் 8,171 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் டெங்கு காய்ச் சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக் கிறது. அதனால் தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகள் விடுதிகள், தனியார் விடுதிகள், காவல் குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கள் என மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சிறப்பு சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன.

தொடர்பு கொள்ளலாம்

சிறப்பு சுகாதாரக் குழுவினர், விடுதிகள் மற்றும் குடியிருப்பு களுக்கு சென்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்று கண்காணிப்பார்கள். அப்படி யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உடனடியாக தேவையான பரிசோத னைகளை செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் தானாக கடைகளில் சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான தகவல்களை அளிக்கவும், பெறவும் சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் 044-24350496, 044-24334811 மற்றும் செல்போன் எண் 9444340496 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x